My Loud Speaker என்று காந்தியால் புகழப்பட்டவர் கோவை சுப்ரி

My Loud Speaker என்று காந்தியால் புகழப்பட்டவர் கோவை சுப்ரி

Share it if you like it

சுப்ரமணியம் என்கிற சுப்ரி

கொங்கு நாடு தந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வரிசையில் கோவை சுப்ரமணியம் என்கிற ‘சுப்ரி’ அவர்களுக்கு ஓர் முக்கிய இடம் உண்டு.

கோயம்புத்தூரில் அந்த காலத்தில் ‘சலிவன் தெரு’ என்று ஒரு தெரு உண்டு. கோவை வேணுகோபால சுவாமி தெப்பக்குள வீதி தான் அது. அதற்கு ‘சுப்ரி’ தெரு என்றொரு பெயர் உண்டு. கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் இயக்கம் தோன்றி வளர காரணமாக இருந்தவர்களுள் ‘சுப்ரி’ அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. தோற்றத்தில் மிகவும் மெலிந்தவர், மன உறுதியில் எஃகினைக் காட்டிலும் உறுதி படைத்தவர்.

அப்போதைய கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவுக்குச் செயலாளராக இருந்து, ஏறக்குறைய எல்லா அனைத்திந்திய காங்கிரஸ் மாநாடுகளுக்கெல்லாம் சென்று வந்தவர்.

கோவை மாவட்டத்தில், கட்சிக்கு கிராமம் தோறும் கிளைகளைத் தோற்றுவித்தவர். 1921ல், நாக்பூரில் நடந்த கொடிப் போராட்டத்துக்கு, சுமார் 12 தொண்டர்களோடு கலந்து கொண்டு, ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

இவருடைய தந்தையார் பெயர் கிருஷ்ண ஐயர். 1924 ஆம் ஆண்டில், கோவை மாவட்டத்தில் பயங்கர வறட்சி ஏற்பட்டது. மக்கள் பட்டினியால் மடிந்தனர். அரசாங்கம் இதை அதிகம் பொருட்படுத்தாமல் அலட்சியம் காட்டியது. ஆனால் சுப்ரி அவர்கள் அவிநாசிலிங்கம் செட்டியார், சி.பி.சுப்பையா ஆகியோருடன் சேர்ந்து பல நிவாரண உதவிகளைச் செய்து, மக்கள் மாண்டு போகாமல் காத்தனர்.

1925ல், ‘அகில இந்திய நூற்போர் சங்கம்’ திருப்பூரில் தொடங்கப் பட்டது. இதனைத் தொடங்க, கதர் இயக்கத்தின் நாயகரான கோவை அய்யாமுத்து அவர்களோடு சேர்ந்து, சுப்ரியின் பங்களிப்பு முக்கியமானது. இந்த சங்கம் திருப்பூரில் தொடங்கப் பட்ட காலத்துக்குப் பின், கதர் உற்பத்தியில் பல கிராமங்களிலும் அதிகரித்தது.

1929ல், லாகூரில் கூடிய காங்கிரஸ் மகாநாட்டில், ‘பூரண சுதந்திரப் பிரகடனம்’ வெளியிடப் பட்டது.  ஜனவரி 26 ஆம் தேதியை நாட்டின் விடுதலை நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப் பட்டது. இந்த முடிவினை கோவை மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, சுப்ரி அவர்களும் மற்ற தேச பக்தர்களும் மக்களுக்குத் தெரிவித்தனர்.

1930ல், மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற் கொண்ட போது, அந்த போராட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும், சுப்ரி கோவையில் ஊர்வலங்களை நடத்தினார். இந்தப் போராட்டத்தில், சுப்ரி ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை பெற்றார். அவிநாசி லிங்கம் செட்டியார், பாலாஜி போன்றவர்களும் தண்டிக்கப் பட்டனர். 1932ல், அந்நிய ஆங்கிலேய அரசு, இந்திய காங்கிரஸ் இயக்கத்தை சட்ட விரோதமானது எனக் கூறி, தடை செய்த போது, தலைவர்கள் அடக்கு முறைக்கு ஆளாகினர்.

அப்போது அந்த அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து போராடியதற்காக, சுப்ரி, அவரது இளம் மனைவி கமலம், தாயார் பாகீரதி அம்மாள் ஆகியோர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். மூவருக்கும் ஆறு மாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. இந்த கால கட்டத்தில் தான், திருப்பூரில் போலீசாரின் தடியடியில் குமாரசாமி எனும் தொண்டர் (திருப்பூர் குமரன்) காலமானார்.

1933ல், மறுபடியும் அந்நிய துணிக்கடை மறியலில் ஈடுபட்டு, இவரது மனைவி கமலம், மற்ற தொண்டர்களான அம்புஜம் ராகவாச்சாரி, முத்துலட்சுமி, நாராயண சாஸ்திரி ஆகியோர் நான்கு மாத சிறை தண்டனை பெற்றனர். அதே ஆண்டில் ராஜாஜி தலைமையில், திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டமைக்காக சுப்ரி, திருமதி சுப்ரி, கோவிந்தம்மாள், அய்யாமுத்து, உடுமலை சாவித்திரி அம்மாள், பி.எஸ்.சுந்தரம், அவரது மனைவி, தாயார் ஆகியோர் கைதாகி ஆறு மாத தண்டனை பெற்றனர்.

            சுப்ரி அகில இந்திய தலைவர்கள் பலரை அழைத்து வந்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தினார். ராஜாஜியுடன் வேலூர், கடலூர் சிறைகளில் இருந்திருக்கிறார். சுப்ரி அவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உண்டு.  காந்தியடிகளின் சொற்பொழிவுகளை தமிழில் மொழி பெயர்க்கும் வேலையை இவர் செய்து வந்ததனால், இவரை ‘மை லெளட் ஸ்பீக்கர்’ என்றே காந்தி அன்போடு அழைத்தார்.

1934ல் நடந்த தேர்தலில், அவிநாசிலிங்கம் செட்டியாரின் வெற்றிக்காக, இவர் மிகவும் பாடுபட்டார். 1937ல் நடந்த சட்ட சபை தேர்தலிலும், கோவை நீலகிரி மாவட்டங்களில் காங்கிரசின் வெற்றிக்கு உழைத்தார்.

1941இல் ஜாலியன் வாலாபாக் தினமாக அனுசரித்து கூட்டம் நடத்திய காரணத்துக்காக, சிறை தண்டனை பெற்று, பொள்ளாச்சி கொண்டு செல்லப் பட்டார். 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில், பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டு, வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பிறகு இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்த பின், பொது விடுதலையின் போது விடுதலையாகி வெளியே வந்தார்.

இவர் கோவை மாவட்ட காங்கிரஸ் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், கோவை நகர சபை தலைவர்; 1947-52 காலகட்டத்தில் சென்னை சட்டசபை உறுப்பினர் இப்படி பல நிலைகளில் பணியாற்றியிருக்கிறார். இவர் முருகப் பெருமானைக் குறித்து ஏராளமான பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதற்கு ‘முருக கானம்’ என்று பெயரிட்டார்.


Share it if you like it