தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அதிகளவில் பெருகி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு கூட போதைப்பொருள் எளிதில் கிடைப்பதால் போதை பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது. இதற்கு தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் தலைவிரித்தாடுகிறது. இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் (எஸ்ஆர்எம்) இன்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பணக்கார குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் அங்கு போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடி வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலையிலேயே திடீரென இந்த கல்லூரி வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியே பரபரப்பானது. இதனையடுத்து தனியார் கல்லூரியில் சுற்றியுள்ள விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் அடுக்குமாடியில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதிலும் என்னென்ன வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின்போது, மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் சிக்கின. இதன் காரணமாக அந்த கல்லூரியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.