நார்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா.
இதற்கு முன்னர் இந்த பார்மெட்டில் இருவரும் மூன்று முறை விளையாடி உள்ளனர். அந்த மூன்று ஆட்டமும் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, காட்சி மற்றும் ரேபிட் முறை ஆட்டங்களில் கார்ல்சனை சில முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.
18 வயதான பிரக்ஞானந்தா, மூன்று சுற்றுகளுக்குப் பிறகு 5.5 புள்ளிகளை பெற்றார். இதில் வெள்ளை நிற காய்களை பயன்படுத்தி அவர் விளையாடி இருந்தார். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் கார்ல்சன் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கிளாசிக்கல் செஸ் ஆட்டத்தில் காய்களை நகர்த்த வீரர்களுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும். வழக்கமாக இந்த வகை ஆட்டத்தில் ஒரு மணி நேரம் வரை கூட காய்களை நகர்த்த வீரர்கள் நேரம் எடுத்துக் கொள்ள முடியும். இதே தொடரில் மகளிர் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.