சிவகங்கை மாவட்டத்தில் 1293 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் 1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் அவித்த முட்டை வழங்கப்பட வேண்டும். நாமக்கல்லில் இருந்து ஒப்பந்ததாரர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு வாரத்திற்கு இரு முறை முட்டை சப்ளை செய்ய வேண்டும். வாரம் இரு முறை வந்து செல்வதற்கான வாகன வாடகையையும் அரசு செலுத்தி விடுகிறது.
ஆனால் முட்டை ஒப்பந்ததாரர்கள் வாகன வாடகையை மிச்சம் செய்யும் நோக்கில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து மொத்த முட்டைகளையும் பள்ளிகளுக்கு வழங்கி விடுகின்றனர். இதனால் முட்டைகள் விரைவில் அழுகிவிடுவதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே பள்ளிக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகிவிடுவதாக சத்துணவு மைய பொறுப்பாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் மீண்டும் அழுகிய முட்டைகள் தான் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் பி.ஏ.,(சத்துணவு) மல்லிகாவிடம் கேட்டபோது, அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. இது குறித்து விசாரிக்கிறோம் என்றார். சத்துணவு என்று பெயர் வைத்து விட்டு கெட்டுப்போன முட்டைகளை கொடுப்பதுதான் திராவிட மாடலா ? பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவு முட்டையில் கூடவா ஊழல் செய்ய வேண்டும். தனியார் பள்ளியில் பணம் கொடுத்து படிக்க முடியாததால் தான் அரசு பள்ளியில் படிக்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கும் சத்துணவு முட்டையில் கூட ஊழல் செய்ய எப்படி மனம் வருகிறது.