ஹிந்து மாணவர்களுக்கு படிப்பு கிடையாது: வெளியேற்றிய கிறிஸ்தவ மிஷனரி பள்ளி?!

ஹிந்து மாணவர்களுக்கு படிப்பு கிடையாது: வெளியேற்றிய கிறிஸ்தவ மிஷனரி பள்ளி?!

Share it if you like it

ஹிந்து மாணவர்களுக்கு படிப்பு கிடையாது என்று சொல்லி பள்ளியை விட்டு வெளியேற்றி இருக்கிறது கிறிஸ்தவ மிஷனரி பள்ளி. இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பள்ளி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி என்பதுதான். இதனால், அப்பள்ளி நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அருகேயுள்ள மருத்துவாம்பாடி கிராமத்தில் 3,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஹிந்து ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சொந்தமாக 17 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில், புனித மரியன்னை ஆ.ர்.சி.எம். தொடக்கப் பள்ளியும், மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இக்கிராம மக்கள் கடந்த 150 வருடங்களுக்கு மேலாக தேவாலயம் அருகேயுள்ள சாலையைத்தான் வெளியில் சென்றுவரவும், வெளியூர்களுக்கு சென்று வரவும் பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், இத்தேவாலயத்தின் பங்குத்தந்தையாக புதிதாக பதவியேற்ற யேசுதாஸ் என்பவர், மேற்படி மருத்துவாம்பாடி கிராமத்தில் வசிக்கும் ஹிந்து ஆதிதிராவிட மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கூறியிருக்கிறார். இதற்கு இக்கிராம மக்கள் மறுப்புத் தெரிவித்து விட்டார்கள். இதனால், ஆத்திரமடைந்த பாதிரியார் யேசுதாஸ், மேற்படி கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுக்கும் வகையில் சுவர் கட்டி வருகிறார். இதுகுறித்து கடந்த 10 நாட்களாக மருத்துவாம்பாடி மக்கள் தேவாலய நிர்வாகத்திடம் பேசிப் பார்த்தும் எந்த பலனும் இல்லை.

எனவே, வெளியில் சென்றுவர வேறு வழியில்லாத நிலையில், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் கிராம மக்கள். இது பாதிரியாருக்கு எரிச்சலை ஏற்படுத்தவே, நேற்று காலையில் பள்ளிக்குச் சென்ற ஹிந்து மாணவர்கள் அனைவரையும், பள்ளிக்கு வரவேண்டாம் என்று சொல்லி, வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பி இருக்கிறது கிறிஸ்தவ மிஷனரி பள்ளி நிர்வாகம். இதனால், மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே, என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்து நிர்வாகிகள் அப்பாவி ஹிந்து பெற்றோர்கள்.

மதம் மாற மறுத்த ஒரே காரணத்துக்காக கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அடைத்ததோடு, பள்ளி மாணவர்களின் படிப்பையும் கேள்விக்குறியாக்கி இருக்கும் பாதிரியார் யேசுதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். அதேசமயம், இது கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் பள்ளியாக இருந்தாலும், அரசு உதவி பெறும் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்க, ஹிந்து மாணவர்களை பள்ளிக்கு வரக்கூடாது என்று சொல்ல, பள்ளி நிர்வாகத்துக்கு என்ன உரிமை இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும், தி.மு.க. ஆட்சியில் ஹிந்துக்களுக்கு கிடைக்கும் நீதி இதுதானா? என்றும் கேட்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்றம் மிகத் தீவிரமாக இருக்கிறது. ஏற்கெனவே, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியாலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி லாவண்யா மதம் மாற மறுத்ததால் டார்ச்சர் செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் ஹிந்து மாணவ, மாணவிகளை மதம் மாற்றம் செய்ய முயற்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், மத்தம் மாற மறுத்ததால் பள்ளிக்கே வர வேண்டாம் என்று சொல்லி ஹிந்து மாணவர்களை வெளியேற்ற முயன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it