விதிகளை மீறி உதயநிதி பங்கேற்ற விழாவில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட ஸ்டாலின் கட் அவுட், திடீரென சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
2019-ம் ஆண்டு அரசியல் கட்சியினர் வைத்திருந்த கட் அவுட்டால் சென்னையிலும், கோவையிலும் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தி.மு.க.வினர் யாரும் எந்த நிகழ்ச்சிக்கும் கட் அவுட் வைக்கக் கூடாது என்று கட்சித் தலைமை உத்தரவிட்டது. மேலும், கட் அவுட் கலாசாரத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், தி.மு.க. ஆளும் கட்சியான பிறகு, மேற்கண்ட உத்தரவு காற்றில் பறந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் கட் அவுட் வைப்பது தி.மு.க.வினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தாம்பரம் மாநகர தி.மு.க. மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான கபடி போட்டிகளை தாம்பரத்தில் நடத்தி வருகின்றன. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்காக தாம்பரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கு அருகே முதல்வர் ஸ்டாலினின் பிரம்மாண்ட கட் அவுட் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கட் அவுட் திடீரென நேற்று இரவு சரிந்து விழுந்தது. நல்ல வேளையாக அருகில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. கட் அவுட் வைக்கக் கூடாது என்று பெயரளவில் உத்தரவிட்டு விட்டு, அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கட் அவுட் வைக்கும் தி.மு.க.வின் இந்த செயலை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.