திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக பால் கொள்முதல், பால், பால் சார்ந்த சார் உபபொருட்களின் உற்பத்தி, விநியோகம் குறித்த தவறான தகவல்களை தொடர்ந்து
அளித்து வருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும் பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை (பால்வளத்துறை) அதிகாரிகளும், ஆவின் அதிகாரிகளும் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக பால் கொள்முதல், பால், பால் சார்ந்த சார் உபபொருட்களின் உற்பத்தி, விநியோகம் குறித்த தவறான தகவல்களை தொடர்ந்து
அளித்து வருவதாகவும், அதிகாரிகள் அளிக்கும் தகவல்களை நம்பி முதலமைச்சரும், பால்வளத்துறை அமைச்சரும் தவறான தரவுகளை பொதுமக்களுக்கு தெரிவித்து வருவதாகவும் கூறி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் உண்மையான கள நிலவரம் குறித்து அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.
ஆனால் அரசு தரப்பிலிருந்தும், ஆளுங்கட்சி ஆதரவு ஊடகங்கள் தரப்பிலிருந்தும் அவற்றை நம்ப மறுத்து வரும் சூழலில் பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை, ஆவின் அதிகாரிகள் அரசுக்கு தவறான தகவல்களை தந்து வருவது இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஏனெனில் இன்று (17.06.2024) வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கையில் இந்தியாவின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து 4.57 % பங்களிப்போடு மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பால்வளத்துறை சரித்திர சாதனை படைத்திருப்பதாகவும், அதன் மூலம் ஆவின் நிறுவனம் இரண்டாம் இடம் பிடித்து மகத்தான சாதனை புரிந்திருப்பதாகவும் ஒரு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டு அது ஊடகங்கள் மூலம் பரபரப்பாக பேசப்பட்டும் வருவது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கிறது
ஏனெனில் “NDDB” என்று அழைக்கப்படும் “தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்” அதன் வெளியிடப்பட்டு (https://www.nddb.coop/information/stats/milkprodstate) வெளியிடப்பட்டுள்ள 2001-2002 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரைக்கும் இந்தியா முழுமைக்குமான பால் உற்பத்தி குறித்த தரவுகளை பார்க்கும் போது அதில் தமிழ்நாடு முதல் பத்து இடங்களுக்குள் வரவில்லை என்பதும், ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் பின்தங்கிய மாநிலங்களோடு மட்டுமே போட்டியிடுவதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
குறிப்பாக, 2022 – 2023 நிதியாண்டின் அடிப்படையில் ஒட்டுமொத்த இந்தியாவின் பால் உற்பத்தியில் 3 6.242 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து முதல் இடத்தில் உத்தரபிரதேசமும், 2ம் இடத்தில் ராஜஸ்தான் (33.307 மில்லியன் டன்), 3ம் இடத்தில் மத்திய பிரதேசம் (20.122 மில்லியன் டன்), 4ம் இடத்தில் குஜராத் (17.281 மில்லியன் டன்), 5ம் இடத்தில் ஆந்திரபிரதேசம் (15.448 மில்லியன் டன்), 6வது இடம் மகராஷ்டிரா (15.042 மில்லியன் டன்), 7வது இடம் பஞ்சாப் (14.301 மில்லியன் டன்), 8வது இடம் கர்நாடகா (12.829 மில்லியன் டன்), 9வது இடம் பீகார் (12.503 மில்லியன் டன்), 10வது இடம் ஹரியானா (11.966 மில்லியன் டன்) இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதல் பத்து இடங்களை கடந்து 10.317 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியானால் ஒட்டுமொத்த இந்தியாவின் பால் உற்பத்தியில் 10.317மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை இரண்டாம் இடத்தில் இருப்பதாக தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பா மேம்பாட்டுத்துறை அதிகாரிகளும், ஆவின் அதிகாரிகளும் நம்ப வைத்தது முதலமைச்சரையும், அரசையும், மக்களையும் ஏமாற்றும் மிகப்பெரிய மோசடியான செயல் அல்லவா..?
தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் பால் கொள்முதலிலும், பால், பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தியிலும் படுபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்றாண்டுகாலமாக பொதுமக்களுக்கு ஆவின் பால் மற்றும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் சார்ந்த உபபொருட்கள் கிடைப்பது என்பது மிகவும் அரிதாகி வருவதை மறைக்கும் விதமாக முதலமைச்சர் மூலமாகவே தவறான புள்ளி விவரங்களை தெரிவிக்க வைத்து அறிக்கை வெளியிட்டிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அரசுக்கு தவறான தகவல்களை அளித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒட்டுமொத்த இந்தியாவின் பால் உற்பத்தியில் 10.317 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்திருப்பது ஆவினின் மகத்தான சாதனையா.? அல்லது தமிழகத்தின் பால் உற்பத்தியில் உள்ள அனைத்து பால் நிறுவனங்கள் இணைந்த கூட்டு சாதனையா..? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.