தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்படும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற தமிழக அரசும், போலீசாரும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடிக்கம்பங்களை நட்டுள்ளதாகவும், அதனை அகற்றக்கோரி சென்னையைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று ( மார்ச் 05) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக அமைத்துள்ள கொடிக் கம்பங்களை அகற்ற தமிழக அரசும், போலீசாரும் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழக தலைமைச் செயலாளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற ஒத்துழைப்பு அளிப்பது இல்லையா என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.