பெண்கள் கிறிஸ்தவ மகளிர் கல்லூரி சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான போட்டியின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்தக் கல்லூரி வளாகத்தில் இன்று (ஆக.30) நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விழாவை தொடக்கி வைத்து பேசினார். அதில் அவர் பேசியதாவது :-
“பெண்களின் வளர்ச்சி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேசி வருகிறார். இன்று பெண்களுக்கு எல்லா கதவுகளும் திறந்து உள்ளன. தற்போது ஆண்களைவிட பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரம் போதைப் பொருள்களின் பரவல் எதிர்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது.
“தனிநபர், குடும்பத்தை மட்டுமின்றி சமூகம் மற்றும் ஒரு மாநிலத்தையே அவை சிதைத்து விடுகின்றன. ஒருகாலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் விவசாயம் உட்பட பல்வேறு செயல்பாடுகளில் முதன்மையாக இருந்தன. ஆனால், இன்று போதைப் பொருள்களால் அவற்றின் நிலைமை மாறியிருக்கிறது. சிறப்பாக இருந்த பஞ்சாப் மாநிலம், தற்போது போதைப் பொருள்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
“தமிழத்தில் போதைப்பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் விற்பனை தடையின்றி நடைபெறுகிறது. மேலும், ஹெராயின், கொக்கைன் போன்ற போதைப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி உள்ளனர். தற்போது பல பில்லியன் கணக்கில் பணம் ஈட்டக்கூடிய தொழிலாகப் போதைப்பொருள் விற்பனை உள்ளது.
“போதைப்பொருளைப் புழக்கத்தில் விடுவதற்கான குற்றக் கும்பல் தமிழகத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடல் எல்லைப் பகுதிகளில் வெளி நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருள்களை மெட்ரிக் டன் கணக்கில் நமது கடற்படை மற்றும் கடலோரக் காவற்படையினர் பறிமுதல் செய்கின்றனர்,” என்றார்.
நாம் போதைப் பொருள் பழக்கத்தைக் குறைக்க நினைக்கக்கூடாது. அதை முற்றிலும் வெளியேற்ற வேண்டும். போதைப் பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகிறார்கள். பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கிப் பேசுவதில்லை. நாம் போதைப் பொருள்கள் குறித்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
“பெண்கள் வளர்ச்சி என்பது வெறுமனே தனிநபர் வளர்ச்சி இல்லை. அது தேசிய வளர்ச்சி. பெண்கள் வளர்ந்தால் தேசம் வளரும். உங்கள் கனவுகளை போதைப்பொருள்கள் போன்ற பல்வேறு விவகாரங்கள் தடுக்கும். எச்சரிக்கையாக அவற்றை கடந்து வாழ்வில் முன்னேற வேண்டும்,” என்று ஆளுநர் ரவி பேசினார்.