கன்னியாகுமரியில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கலந்து கொண்டு, மதச்சார்பின்மை குறித்து பேசிய கருத்தானது, இண்டி கூட்டணி அரசியல் கட்சிகளின் மத்தியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. .
கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் உள்ள இந்து தர்ம வித்யா பீடம் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த உரையில், “மதச்சார்பின்மை என்பது ஒரு ஐரோப்பிய கருத்து, அதற்கு இந்தியாவில் இடமில்லை. நம்முடைய நாட்டு மக்களுக்கு நிறைய மோசடிகள் செய்யப்பட்டுள்ளது, அவற்றில் ஒன்று தான் மதச்சார்பின்மைக்கு கொடுக்கப்பட்ட தவறான விளக்கம். ஐரோப்பா போன்ற நாடுகளில் மதச்சார்பின்மை வந்தது. ஏனெனில், அங்கு சர்ச்சுக்கும் அரசருக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது. அதனால் அங்கு மதச்சார்பின்மை தேவையானது. ஆனால் இந்தியா எப்படி தர்மத்திலிருந்து விலகி இருக்க முடியும் ? இந்தியாவில், மதச்சார்பின்மை தேவையில்லை,” என்று அவர் பேசினார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் திராவிட மற்றும் இந்து விரோத சக்திகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். ஆளுநருக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் இவ்வாறு பொறுப்பற்ற கருத்தைச் சொல்ல முடியும், முதலில் இவர் எப்படி கவர்னர் ஆனார் ? என்று திமுக உடன்பிறப்புகள் கொந்தளித்து வருகின்றனர். மேலும் தமிழக ஆளுநரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், ஆளுநர் பதவியில் இருந்து உடனடியாக ஆர்.என். ரவி அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் திமுக உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து திமுக செய்தி தொடர்பாளர் செந்தில் குமார், “ஒரு மாநில ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்திற்கு எதிராக பேச முடியும்? அரசியலமைப்புக்கு முரணான கருத்துக்களை பரப்பியதற்காக அவர் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது ? என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இது குறித்து திமுகவை சேர்ந்த சமூக வலைதள ஆதரவாளர் சௌமியா ரமேஷ் கூறுகையில், “இந்தியாவின் அரசியல் சாசனம் தான் இந்தியாவின் முக்கிய சாராம்சம். நீங்கள் ( ஆர்.என்.ரவி) விரும்புவதைத எல்லாம் தேர்ந்தெடுத்து செய்ய முடியாது. அரசின் முக்கிய பதவியில் இருக்கும் தமிழக ஆளுநர் ரவி போன்றவர்கள் அரசியல் சாசனத்தை சிறுமைப்படுத்துவது வெட்கக்கேடானது, என பதிவிட்டார்
திமுக ஆதரவாளரான டாக்டர். ஜெய்சன் பிலிப்ஸ் கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரான ஆளுநர், மாண்புமிகு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். ஆனால் இங்கு ஆளுநர் ரவி அவர்கள், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசுகிறார். எனவே, தமிழக ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என காங்கிரஸ் மற்றும் திமுக ஆதரவாளர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மதச்சார்பின்மை குறித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டேனியல் ராஜா கூறுகையில், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இது போன்ற அபத்தமான, பகுத்தறிவற்ற, நியாயமற்ற ஆத்திரமூட்டும் கருத்துக்களை பேசுவதில் பெயர் பெற்றவர்”. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிருந்தா காரத் பேசுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டமே வெளிநாட்டுக் கருத்து” என நாளை ஆளுநர் ரவி கூறுவார், இது தான் ஆர்.எஸ்.எஸ் புரிதல். இப்படிப்பட்ட ஒருவர் தமிழகம் போன்ற முக்கியமான மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது, என்று குறிப்பிட்டுள்ளார்.