தமிழகம் முழுவதும் உள்ள 46 ஆயிரம் கோயில்களில் 40 ஆயிரத்து 156 கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் பல கோயில்கள் சிதிலமடைந்து கேட்பாரற்று கிடக்கின்றன. பலகோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள பக்தர்களை கோயில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. பெரும்பாலான கோயில்களின் சுவர்களும், கோயில் குளங்களும் செடி, கொடிகள் மண்டிகிடக்கின்றன. எனவே இந்த கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்எம். கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவேநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கியஅமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘தமிழகம் கோயில்கள் நிறைந்த ஆசிர்வதிக்கப்பட்ட, புண்ணிய பூமியாக திகழ்கிறது.
தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவை இந்திய திருநாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி மற்றும்வாழ்வாதாரத்துக்கான தூண்களாக விளங்குகின்றன. பாரத தேசத்தின் அடையாளத்துடன் ஒருங்கிணைந்த மரபுகள் மற்றும்நடைமுறைகளை நிலைநிறுத்துவதற்கு இந்த புனித நூல்கள் மிக அவசியம்.
தமிழக கோயில்கள் இந்து தர்மத்தின் கலங்கரை விளக்கமாகவும், ஆன்மீகம், கலாச்சாரம் ஆகியவற்றின் பண்பாட்டு சின்னமாகவும், கட்டிடம், கவிதை, இசை, நாட்டியத்தை பறைசாற்றும் கூடாரமாகவும் வேரூன்றியுள்ளன. சேர, சோழ, பாண்டியர், பல்லவர் காலத்தில் தமிழக கோயில்களும், கோயில் குளங்களும் போற்றி பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. எனவே பக்தர்கள், தன்னார்வலர்கள் மூலமாக உழவாரப்பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். மேலும், இந்த கோயில்களில் நடைபெறும் உழவாரப்பணிகளை கண்காணிக்க அறநிலையத்துறையால் அமைக்கப்பட்டுள்ள நிலைக்குழு, கோயில்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 5-க்கு தள்ளிவைத்துள்ளனர்.