கடந்த ஆண்டில் நாடு முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1.6 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதிக விபத்துகள் நேரிட்ட மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில், மக்களவையில் கேள்வி நேரத்தின்போது சாலை விபத்துகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அப்பதிலில் அவர், “கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 1,68,491 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது 2021-ம் ஆண்டில் 1,53,972 ஆகவும், 2020-ம் ஆண்டில் 1,38,383 ஆகவும் இருந்தது. அதேபோல், 2022-ம் ஆண்டில் 4,61,312 சாலை விபத்துகள் நேரிட்டிருக்கின்றன. 2021-ம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துகளும், 2020-ம் ஆண்டில் 3,72,181 சாலை விபத்துகளும் நிகழ்ந்திருக்கின்றன.
சாலை விபத்துகள் அதிகம் நடந்த மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கின்றன. கடந்த ஆண்டு அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 22,595 சாலை விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழகத்தில் 17,884-ம், மகாராஷ்டிராவில் 15,224-ம், மத்தியப் பிரதேசத்தில் 13,427-ம், கர்நாடகாவில் 11,702-ம், டெல்லியில் 1,461 சாலை விபத்துகளும் நேரிட்டிருக்கின்றன.
அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பயன்படுத்துதல், போதையில் வாகனம் ஓட்டுதல், தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னல்களில் சிகப்பு விளக்கு பார்க்காதது, ஹெல்மெட், சீட்பெல்ட் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணியாதது, மோசமான வானிலை மற்றும் சாலை, வாகன ஓட்டிகள், சாலையில் நடப்பது, வழிப்போக்கர்களின் தவறால் சாலை விபத்துகள் நிகழ்கின்றன” என்று நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.