ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், தொடர்ந்து ரஜினி, கமல், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர். அந்த வகையில், ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், மறைந்த நடிகர் விவேக், சுமன், மணிவண்ணன், வடிவுக்கரசி, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான ‘சிவாஜி’ படத்தை இயக்கினார். ஏ.வி.எம். நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம், மாபெரும் வெற்றியை பெற்றது. குறிப்பாக, படத்தில் ரஜினி பேசிய ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ பஞ்ச் டயலாக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படம் வெளியாகி நேற்று 15 ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. இதையொட்டி, இயக்குனர் ஷங்கர் நேற்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, ரஜினியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘நமது சிவாஜி தலைவரை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்றும், ‘உங்களின் ஆற்றல், பாசம், நேர்மறையான ஆரா எனது நாளை மிகச் சிறந்த நாளாக ஆக்கியுள்ளது’ என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, ஷங்கருடன் அவரது மகளும் நடிகையுமான அதிதி சங்கரும் உடன் சென்றிருந்தார். அவரும் ரஜினியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த போட்டோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் அதிதி.