தமிழக கஞ்சா எலிகள்… திருத்துவது எப்படி? கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

தமிழக கஞ்சா எலிகள்… திருத்துவது எப்படி? கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

Share it if you like it

தமிழகத்தில் இருக்கும் எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையத்துக்கு வருகின்றன. இந்த எலிகளை எப்படி திருத்துவது என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கிண்டலாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள அரிகேசவநல்லூர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஒரு மதம் சார்ந்த திருவிழாவிற்கு மட்டும் அதிக பேருந்துகளும், ரயில்களும் விட வேண்டும் என்று கோரிக்கை விட்டிருந்தார். திருச்செந்தூரில் எல்லா வழிபாட்டு தலங்களும் உள்ளன. ஆகவே, எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் சேர்த்து கோரிக்கை விட்டிருந்தால் அது மகிழ்ச்சி. ஏற்றத்தாழ்வு பாரபட்சம் இருக்கக் கூடாது.

தமிழகத்தில் இருக்கும் எலிகள் கஞ்சாவை தேடி காவல் நிலையம் வருகிறது. காவல் நிலையத்தில் இருக்கும் கஞ்சாவை யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? என்கிற ஒரு பெரிய பிரச்னை தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோல, எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் சமூகநீதி. ஆகவே, சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால், பொது சிவில் சட்டம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல.

பாரத பிரதமர் மோடி, ’ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு சட்டம் இருக்க முடியாது. ஒரே சட்டமாகவே இருக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சட்டத்தின் உண்மையைப் புரிந்துகொண்டு எதிர்க்கட்சியாக இருப்பவர்கள்கூட ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். டெல்லி முதலமைச்சர் பொது சிவில் சட்டத்தை ஆதரித்திருக்கிறார். சரத் பவார் போன்றவர்கள்கூட நாம் இதைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதனால் இந்தச் சட்டம் இன்றைய காலகட்டத்துக்கு அவசியமானது. நாம் அதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். பொது சிவில் சட்டம் தேவை என்பதே எனது கருத்து” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it