ஆதிதிராவிடர் மீதான வன்முறை: திராவிட மாடல் அரசு 2-வது இடம்!

ஆதிதிராவிடர் மீதான வன்முறை: திராவிட மாடல் அரசு 2-வது இடம்!

Share it if you like it

ஆதிதிராவிடர் மக்கள் மீது அதிகளவில் நிகழ்த்தப்படும் வன்முறைகளில், தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்திருக்கிறார்.

சென்னைக்கு வருகை தந்திருந்த தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்தார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக அந்த வகுப்பில் இருந்து வெளியேறி விடுகின்றனர். ஆகவே, மதம் மாறிய பிறகும் அவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று ஜாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது. மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் என்றுதான் கருதப்படும். இதுகுறித்து பல்வேறு புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருகிறது. இதையடுத்து, போலிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.

தவிர, ஆதிதிராவிடர் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை தொடர்பாக, தமிழகத்தில் இருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 200 புகார்கள் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு வந்திருக்கின்றன. இவற்றில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 100 வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. ஆதிதிராவிடர் மக்கள் மீது நிகழும் வன்முறைகளில் ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கின்றன. அதோடு, தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு பொதுப்பாதையை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு, தனியாக பாதை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக சமீபத்தில் வந்த புகாரையடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்”  என்று கூறினார்.

சமூகநீதி, சமூகநீதி என்று கூக்குரலிடும் தமிழகத்தில்தான் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்து ஆடுகிறது. அதேசமயம், உத்தரப் பிரதேசம், குஜராத்தில் அத்திபூத்தார்போல் எப்போதாவது ஒரு சம்பவம் நடக்கும். உடனே, ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை பாரீர் என்று, திராவிட மாடல் அரசு ஊதி பெரிதாக்குவது வழக்கமாக இருக்கிறது. எனவே, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களை சுட்டிக்காட்டி தனது ஆட்சியில் நடக்கும் அவலத்தை மறைக்கப் பார்க்க முயல்கிறது திராவிடல் மாடல் அரசு என்று சாமானிய மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனுமாம்” என்கிற கதையாக இருப்பதாக பொதுமக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.


Share it if you like it