தமிழ்நாட்டில் ஜாதியை வளர்த்தி, ஜாதிக் கலவரத்தை தூண்டிவிட்டது கருணாநிதிதான் என்று தற்போதைய சபாநாயகர் அப்பாவு கூறிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசியலில் நிரந்தர எதிரியும் அல்ல, நிரந்தர நண்பனும் இல்லை என்பது பல்வேறு சம்பவங்கள் மூலம் நிரூபணமாகி இருக்கிறது. உதாரணமாக, தி.மு.க.வை எதிர்த்து ம.தி.மு.க. என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியவர் வைகோ. ஆனால், ஒரு கட்டத்தில் மீண்டும் தி.மு.க.வோடு கூட்டணி வைத்தார். பிறகு, அ.தி.மு.க. கூட்டணிக்கு தாவியவர், தற்போது மீண்டும் தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார். அதேபோல, பா.ம.க. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கும். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவையும் அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இவர்களுக்கு கொள்கையோ கோட்பாடோ கிடையாது.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள், மேற்வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இன்று ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர், நாளை வேறொரு அரசியல் கட்சியில் இருப்பார். இதுபோன்று கட்சி தாவுபவர்கள் தாங்கள் ஏற்கெனவே இருந்த கட்சியை கடுமையாக விமர்சனம் செய்வதும் வாடிக்கை. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி குறித்து, தற்போதைய சபாநாயகர் அப்பாவு கூறியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போது சபாநாயகராக இருப்பவர் அப்பாவு. இவர், ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்தவர். சுயேட்சையாகவும் தேர்தலை சந்தித்தவர். இந்த சூழலில், மாஞ்சோலை கலவரம் தொடர்பாக ஒரு செய்திச் சேனலுக்கு பேட்டியளித்த அப்பாவு, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதாவது, அக்காணொளியில் பேசும் அப்பாவு, “ஜாதிகளை வைத்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, ஜாதிகளை வளர்த்து விட்டவர் கருணாநிதி. பாம்பையும், பாப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு முதலில் பாப்பானை அடி என்று சொல்லிக் கொடுத்தவர் கருணாநிதிதான்.
மாஞ்சோலை கலவரத்துக்கு காரணமும் அவர்தான். திட்டமிட்டு ஏதாவது பண்ணி தகராறு பண்ணுங்க என்று என்னிடமே சொன்னார். முதுகுளத்தூர் கலவரத்தை ஜாதி ரீதியாக ஆக்கியது கருணாநிதிதான். மாஞ்சோலை கலவரத்துக்குப் பிறகு கலெக்டரையும், டி.ஐ.ஜி.யையும் மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆனால், அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? இருவரையும் மாற்றினால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கொதிப்படைந்து விடுவார்கள் என்று கூறினார். அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால், தவறு செய்பவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்துத்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுபோல் இருக்கிறது. இவ்வளவு பெரிய மனிதனுக்கு எவ்வளவு சின்ன புத்தி பாருங்கள்” என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இக்காணொளிதான் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும் கருணாநிதியின் சுயரூபத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.