தமிழகத்தில் நேற்று வணக்கம் மோடி என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கோ பேக் மோடி என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்வதை தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் திராவிட இயக்கங்கள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன. குறிப்பாக, தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, கோ பேக் மோடி என்கிற ஹேஷ்டேக்கை பெரிய அளவில் ட்ரெண்ட் செய்தனர். மேலும், கருப்பு பலூன்களை எல்லாம் பறக்கவிட்டு எதிர்ப்பைக் காட்டினர். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கோ பேக் மோடி என்கிற ஹேஷ்டேக் நீர்த்துப் போய் விட்டது. எனினும், தி.மு.க.வில் ஒரு சில குரூப்களும், கூட்டணிக் கட்சியினரும், திராவிட கழகத்தினரும் மோடி வரும்போதெல்லாம் மேற்கண்ட ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர். பதிலுக்கு பா.ஜ.க.வினரும் வெல்கம் மோடி, வருக மோடி உள்ளிட்ட பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள காந்தி கிராமத்தில் அமைந்திருக்கும் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் பாரத பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருவதையொட்டி, வழக்கம் போல் தி.மு.க. தரப்பும், கூட்டணிக் கட்சியினரும், திராவிட கழகத்தினரும் கோ பேக் மோடி என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ.க.வினர் வணக்கம் மோடி என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இந்த வணக்கம் மோடி என்கிற ஹேஷ்டேக் படுபயங்கரமாக ட்ரெண்ட் ஆனது. நேற்று மட்டும் மொத்தம் 13 லட்சம் பதிவுகளைத் தாண்டியது. இதன் மூலம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வணக்கம் மோடி ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்தது. அதேசமயம், தி.மு.க. அண்கோ போட்ட கோ பேக் மோடி ஹேஷ்டேக் வெறும் 1 லட்சத்தைக் கூட தாண்டவில்லை.
இதையடுத்து, பா.ஜ.க.வினருக்கும், தேசநல விரும்பிகளுக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “இன்று தமிழகத்திற்கு சிறப்பான நாள். நமது பாரத பிரதமர் நரேந்தி மோடி மீது நமது தமிழ் மக்கள் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிரமிக்க வைக்கிறது. அடாது பெய்த மழையிலும் தமிழக மக்களும், நமது காரிய கர்த்தாக்களும் வணக்கம் மோடி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் 13 லட்சம் பதிவுகளை கடந்து வணக்கம் மோடி ஹேஷ்டேக் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழக பா.ஜ.க.வினருக்கும், குறிப்பாக ஐ.டி. விங் தலைவர் நிர்மல்குமாருக்கும் நன்றியை தெரிவித்திருக்கிறார்.