பாரத பிரதமர் மோடியின் போட்டோவை அழித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அவமரியாதை செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மாலை துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் வந்திருக்கிறார்கள். இதையொட்டி, தமிழக அரசு சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விளம்பர பலகைகள், பதாகைகள் சென்னை மாநகரம் முழுவதும் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மேற்கண்ட அரசு விளம்பர பதாகைகளில் மாநில முதல்வரான ஸ்டாலின் படம் மட்டுமே பெரிய அளவில் அச்சிடப்பட்டிருந்தது. அதேசமயம், பாரத பிரதமரான நரேந்திர மோடியின் படம் இடம்பெறவில்லை.
இத்தனைக்கும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் மோடிதான் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி தொடங்கி வைத்தார். அப்படி இருக்க, பிரதமரின் படம் மாநில அரசு விளம்பரத்தில் இடம்பெறாமல் இருந்தது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, தமிழக பா.ஜ.க. சார்பில் மேற்கண்ட மாநில அரசு விளம்பரப் பதாகைகளில், பாரத பிரதமர் மோடியின் போட்டோவை ஒட்டினர். ஆனால், அவ்வாறு ஒட்டப்பட்ட போட்டோவை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அன்றையதினமே கருப்பு பெயின்ட் அடித்து அழித்து விட்டனர். இச்சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்களையும், தேசபக்தர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.