தேர்தலில் வானதியிடம் வாங்கிய குத்து: குத்துப்பாட்டு எழுதி ஆறுதல் அடைந்த கமல்?!

தேர்தலில் வானதியிடம் வாங்கிய குத்து: குத்துப்பாட்டு எழுதி ஆறுதல் அடைந்த கமல்?!

Share it if you like it

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘விக்ரம் -2’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘ஒன்றியத்தின் தப்பாலே’ என்கிற பாடல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்த கமல், இப்படியொரு பாட்டை எழுதி ஆறுதல் புடுத்திக் கொண்டிருக்கிறார் என்று கிண்டலடிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

தமிழ் சினிமாவில் 1980 – 2000 காலகட்டங்களில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கியவர் கமல்ஹாசன். இதன் பிறகு அவரது படங்கள் தொடர் தோல்வியையே சந்தித்து வந்தன. இதனால், பெரிய அளவில் படங்கள் கிடைக்காததால் தானே சொந்தமாக படத்தை தயாரித்து நடித்தும் வந்தார். இவையும் படுதோல்வியை சந்திக்கவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமிட்டானார். இதன் பிறகு, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்குள் நுழையும் முடிவுக்கு வந்தவர், 2018 பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கினார். பின்னர், தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதனால், அவரை பா.ஜ.க.வின் ‘பி டீம்’ என்று கூறிவந்தனர். இதனை கமல் மறுத்து வந்தார்.

இதன் பிறகு நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. மேலும், தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மண்ணைக் கவ்வியது. எனவே, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க கமல் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், கமல் எதிர்பார்த்த எண்ணிக்கை அளவுக்கான தொகுதிகளை தி.மு.க. கொடுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். எநினும், இதிலும் கமலின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக, கோவை தெற்குத் தொகுதியில் பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் மண்ணைக் கவ்வினார் கமல். இதனால், பா.ஜ.க. மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதன் பிறகு, தி.மு.க.வை விமர்சனம் செய்வதைவிட பா.ஜ.க.வை அதிகம் விமர்சனம் செய்யத் தொடங்கினார்.

அதேபோல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இவரது கட்சியினர் மண்ணைக் கவ்வினர். இதைத் தொடர்ந்து, இவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளில் சேரத் தொடங்கினர். இதனால், கட்சி கலகலத்துப் போய் நிற்கிறது. எனவே, அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு மீண்டும் சினிமாவில் கால் பதிக்கலாமா என்ற முடிவில் கமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஏற்கெனவே தான் நடித்து ஹிட்டான விக்ரம் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் கமல். அதன்படி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து எடிட்டிங் வேலைகள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், விக்ரம் 2 படத்தின் முதல் பாடலை நேற்று வெளியிட்டார் கமல். ‘பத்தல பத்தல’ என்ற தலைப்பில் வெளியான இப்பாடலை, கமலே எழுதி பாடியும் இருக்கிறார். இப்பாடலில் ‘கஜானாலே காசில்லை… ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லை இப்பாலே.. சாவி இப்போ திருடன் கையில’ என்ற வரிகள் இடம்பெற்றிருக்கிறது. இதுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்தே மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர். இதற்கு தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்த சூழலில், கமலின் விக்ரம் 2 படத்தின் பாடல் வரிகளில் ஒன்றிய அரசு என்கிற வார்த்தை இடம்பெற்றிருக்கிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், இப்படத்தை வெளியிடுவது தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்தான். மேலும், விக்ரம் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரை பத்தல பத்தல என்கிற பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதால் தி.மு.க.வுக்கு சாதகமாக இப்பாடல் வரிகளை கமல் சேர்த்தாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதுதான் தற்போது சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசையும், பா.ஜ.க.வையும், ஹிந்து மதத்தையும், ஹிந்துக் கடவுள்களையும், ஆதிக்க ஜாதியினரையும் விமர்சித்து ஏதேனும் காட்சிகள் இடம்பெற்றிருந்தால் மட்டும் தமிழ் திரைப்படங்கள் வெற்றிப்படமாக அமையும் என்று பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ், ஞானவேல், வெற்றிமாறன், நெல்சன் உள்ளிட்ட சில இயக்குனர்களும், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஜய், சித்தார்த் உள்ளிட்ட சில நடிகர்களும் கருதுகின்றனர். இதன் விளைவாக சமீபகாலங்களில் வெளியாகிவரும் தமிழ்த் திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகள் அதிகம் இடம்பெற்று வருகின்றன. அதேசமயம், இது சமயத்தில் எதிர்வினையாகவும் முடிவதுண்டு. அந்த வரிசையில் தற்போது கமலும் இணைந்திருக்கிறார் என்று நெட்டிசன்களும், ஹிந்து மத ஆதரவாளர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர். மேலும், வானதி சீனிவாசனிடம் அடைத்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசைப் பற்றி இப்படியொரு பாடலை எழுதி தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று விமர்சனம் செய்கிறார்கள் நெட்டிசன்களும், சாமானியர்களும்.


Share it if you like it