தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட பேராயர்களில் ஒருவர் கூட தலித் கிறிஸ்தவர் இல்லை என்று தலித் கிறிஸ்தவ இயக்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மேத்யூ குமுறலுடன் கூறியிருக்கிறார்.
தலித் கிறிஸ்தவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், தலித் கிறிஸ்தவ இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மேத்யூ கூறுகையில், “தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் தீண்டாமை வடிவங்கள் இன்னும் இருக்கின்றன. தீண்டாமை உச்சத்தில் இருக்கும் 151 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. மேலும், 18 கத்தோலிக்க மறைமாவட்டங்களிலும் தீண்டாமை இருக்கிறது. இங்கெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு என தனியாக ஒரு சர்ச்சும், தலித் கிறிஸ்தவர்களுக்கு என தனியாக ஒரு சர்ச்சும் என 2 சர்ச்கள் இருக்கின்றன. அதேபோல, 2 கல்லறை, 2 சவ வண்டி, 2 திருவிழா, 2 தேரேட்டம் என தனித்தனியாக இருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, தலித் கிறிஸ்தவர்கள் சர்ச் நிர்வாகத்தில் பங்கெடுக்க முடியாது என்கிற தீண்டாமை தடை இதுவரை தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் 10,000 பேராயர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் கூட தலித் என்பதுதான் இதற்கு சாட்சி. நாங்கள் கத்தோலிக்க மதத்தை நம்பியும், கத்தோலிக்க ஆயர்களை நம்பியும்தான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினோம். இதுவரையிலும் அந்த நம்பிக்கையை இழக்காமல்தான் இருக்கிறோம். அதனால்தான் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திலேயே தொடர்ந்து வருகிறோம். ஆனால், தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது” என்று தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
பொதுவாகவே, பட்டியலின ஹிந்துக்களை மதம் மாற்றும்போது எங்கள் மதத்தில் ஜாதி பாகுபாடு கிடையாது என்று சொல்லித்தான் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மதம் மாற்றுகிறார்கள். ஆனால், அங்கும் ஜாதிய பாகுபாடு இருக்கிறது என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாகி இருக்கிறது. பட்டியலின ஹிந்துக்கள் மதம் மாறினாலும், அந்த மதத்திலும் பட்டியல் சமூகத்தினரைப் போலவே நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் வாதமாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திலும் தலித் கிறிஸ்தவர்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என்பதை இச்சம்பவம் தெளிவுபடுத்துகிறது.