திண்டுக்கல்லில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்கத் காத்திருந்த முதியவர் ஒருவர் அநியாயமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்றிருந்தார். எனவே, வழிநெடுகிலும் ஸ்டாலினை வரவேற்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக, பல்வேறு கிராமங்களில் இருந்தும் பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்திருந்தனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியச் செயலாளர் சௌந்தரராஜன் தரப்பில் இருந்தும் ஏராளமான ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்களில், குல்லல்குண்டு என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்கிற முதியவரும் ஒருவர். இவர்கள் அனைவரும் செம்பட்டி என்கிற இடத்தில் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பதற்காக காத்திருந்தனர். அப்போது, வெயில் கடுமையாக இருந்தது.
இந்த நிலைில், முதியவர் ஆரோக்கியசாமி திடீரென ரத்த வாந்தி எடுத்தவாறே மயங்கி விழுந்தார். இதில், என்ன கொடுமை என்றால், ஸ்டாலின் வருவதற்கு சிறிது நேரமே இருந்ததால், அவரை வரவேற்பதிலேயே தி.மு.க.வினர் குறியாக இருந்தார்களே தவிர, முதியவர் ஆரோக்கியசாமியைப் பற்றி யாருமே கண்டுகொள்ளவும் இல்லை, கவலைப்படவும் இல்லை. இதையடுத்து, அதே கிராமத்திலிருந்து வந்திருந்த சிலர் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு போன் செய்து வரவழைத்து ஆரோக்கியசாமியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள்ளாக ஆரோக்கியசாமி இறந்திருந்தார். மண்டையைப் பிளக்கும் உச்சி வெயிலில் ஸ்டாலினை வரவேற்க காத்திருக்க வைக்கப்பட்டிருந்ததால், முதியவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டோ அல்லது இருதயம் வெடித்தோ உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆரோக்கியசாமி, ஒரு ஏழை கூலித் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ அரசியல் வாதிகளின் பகட்டுக்கும் பந்தாவுக்கும் ஒரு ஏழை அப்பாவியின் உயிர் பறிபோயிருக்கிறது.