தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 1.12 கோடி ரூபாய் ரொக்கம், பட்டாசு பெட்டிகள், மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்தான். வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்கள். வட்டாட்சியர் அலுவலகம் முதல் வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை வசூல் களைகட்டும். சிலர் பணமாகவும், வேறு சிலர் பொருளாகவும், இன்னும் சிலர் காஸ்ட்லி மதுப் புட்டிகளாகவும் வசூலிப்பது வழக்கம். ஆகவே, தீபாவளி பண்டிகை வந்து விட்டாலே லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் தங்களது வேட்டையைத் தொடங்கி விடுவார்கள். அரசு அலுவலகங்களை குறிவைத்து ரெய்டில் ஈடுபடுவார்கள். அதன்படி, கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் 4,29,98,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நிகழாண்டு தீபாவளி பண்டிகை எதிர்வரும் 24-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காக அரசு அலுவலர்கள் இப்போதே வசூல் வேட்டையைத் தொடங்கி விட்டார்கள். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. ஆகவே, வசூல் வேட்டையைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று மாலை திடீரென அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். பத்திரப்பதிவுத்துறை வட்டார வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், டாஸ்மாக், போக்குவரத்துத்துறை, மின்துறை உள்ளிட்ட 14 துறைகளைச் சேர்ந்த 30 அரசு அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடந்தது. நள்ளிரவு வரை நடந்த இச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1,12,57,803 ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், பணம் மட்டுமில்லாமல் பட்டாசு பெட்டிகள், மது பாட்டில்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.