குடும்ப அரசியலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஜனநாயகத்தையே குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது என்று தி.மு.க.வின் குடும்ப அரசியலை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.
தமிழகத்தைப் பொறுத்தவரை குடும்ப அரசியல் என்றாலே தி.மு.க.தான். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தில் அரசியலில் கால் பதிக்காதவர்களே இல்லை எனலாம். உதாரணமாக, கருணாநிதி முதல்வராக இருந்தார். இவரது அக்கா மகன் முரசொலி மாறன் 3 முறை மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் தயாநிதி மாறனும் மத்திய அமைச்சராக இருந்தவர்தான். தற்போது எம்.பி.யாக இருக்கிறார். கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, மத்திய அமைச்சராக இருந்தவர். தற்போது முதல்வராக இருக்கும் இளையமகன் ஸ்டாலின், மேயர், துணை முதல்வர் பதிவிகளை வகித்தவர். கருணாநிதியின் மகள் கனிமொழி ஏற்கெனவே மாநிலங்களை உறுப்பினராக இருந்தவர், தற்போது மக்களவை உறுப்பினராக இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
கருணாநிதியின் குடும்பம் மட்டுமல்ல, தி.மு.க.வில் இருக்கும் மூத்த தலைவர்களும் தங்களது வாரிசை களமிறக்க தவறவில்லை. பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன், அமைச்சராகவும் இருக்கிறார். இவரது மகன் கதிர் ஆனந்த், தற்போது எம்.பி.யாக இருக்கிறார். அதேபோல, உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, எம்.பி.யாக இருக்கிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.யாக இருக்கிறார். இவரது மகன் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி எம்.பி.யாக இருக்கிறார். முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகன் தங்கம் தென்னரசு அமைச்சராக இருக்கிறார். மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி.யாக இருக்கிறார். தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் பெரியசாமி மகள் கீதா ஜீவன் அமைச்சராக இருக்கிறார். திண்டுக்கல் ஐ.பெரியசாமி அமைச்சராக இருக்க, அவரது மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இவ்வாறு தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே என தலைவருக்கு நிகராக தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இந்தளவுக்கு தி.மு.க.வில் இருக்கும் இந்த வாரிசு அரசியல் வேறு எந்தக் கட்சிகளிலும் இல்லை. இதனால்தான், பாரத பிரதமர் மோடி முதல் அனைவருமே வாரிசு அரசியல் தேசத்துக்கு நல்லதல்ல என்று கூறிவருகின்றனர். இந்த சூழலில்தான், வாரிசு அரசியலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஜனநாயகத்தையே குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் மணி கூறியிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், மணி இடதுசாரி சிந்தனை கொண்டவர். கம்யூனிஸ்ட் கட்சியின் அபிமானியான இவர், தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். அப்படிப்பட்டவர் தி.மு.க.வின் குடும்ப அரசியல் குறித்து விமர்சித்திருப்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் மூத்த பத்திரிகையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் மணி. இவர் ஒரு தனியார் செய்திச் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ஒருபோதும் குடும்ப அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற குடும்ப அரசியல் இன்று இந்திய ஜனநாயகத்தையே குடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு 18 குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. தாத்தா மந்திரி, செத்துப் போயிட்டாரு (கருணாநிதி), அவரு பையன் மந்திரி (ஸ்டாலின்), மகள் எம்.பி. (கனிமொழி), பேரன் எம்.எல்.ஏ. (உதயநிதி). அப்பா மந்திரி, மகன் எம்.பி.. அப்பா எம்.பி., மகன் எம்.எல்.ஏ. அப்பா எம்.எல்.ஏ., மகன் எம்.பி. என்று இருந்து தற்போது கவுன்சிலர் பதவி வரை வந்துவிட்டார்கள். இதுக்கும் கீழ கக்கூஸ் கழுவுறதுல காசு வரும்னா அங்கயும் வந்துவிடுவார்கள். இது என்ன, நாடா என்னா இது” என்று ஆவேசமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு மணியா இப்படி பேசியது என்று பலரும் மூக்கின் மேல் விரலை வைக்கிறார்கள்.