தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக அவர் விரைவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜ.க. வருகிறது. இதனால், மேற்கண்ட இரு திராவிடக் கட்சிகளில் இருந்து பலரும் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். மேலும், தேசிய கட்சியான காங்கிரஸில் இருந்தும் பலரும் சேர்ந்து வருகின்றனர். இதில், வி.வி.ஐ.பி.க்கள், வி.ஐ.பி.க்கள் ஆகியோரும் அடக்கம். அந்த வகையில், அ.தி.மு.க.விலிருந்து நயினார் நாகேந்திரன், தி.மு.க.விலிருந்து வி.பி.துரைசாமி, காங்கிரஸ் கட்சியிலிருந்து குஷ்பு என பலரையும் உதாராணமாகக் கூறலாம். தற்போது, பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு, தமிழக பா.ஜ.க. அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்றே சொல்லாம். அந்தளவுக்கு இளைஞர்கள் பட்டாளம் பா.ஜ.க.வில் இணைந்து வருகிறது.
இந்த நிலையில்தான், பாரம்பரியமாக தி.மு.க.வில் இருந்துவரும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பா.ஜ.க.வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. காரணம், திருச்சி சிவா பலமுறை எம்.பி.யாக இருந்திருக்கிறார். ஆனால், அவரை தி.மு.க. தலைமை ஒருமுறை கூட மத்திய அமைச்சராக்கியது கிடையாது. அதேசமயம், தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி, தனது மகன் அழகிரி, பேரன் தயாநிதி மாறன் ஆகியோரை எல்லாம் மத்திய அமைச்சர்களாக்கி அழகு பார்த்தார். அவ்வளவு ஏன், சிவாவைவிட அரசியலில் ஜூனியர்களான ஆ.ராசா உள்ளிட்ட சிலரும்கூட மத்திய அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். இது திருச்சி சிவாவுக்கு மிகப் பெரிய மனவருத்தமாக இருந்து வருகிறது. இதனால், கட்சித் தலைமை மீதும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திருச்சியில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார் சிவாவின் மகன் சூர்யா. இது தொடர்பாக நடந்த நேர்காணலிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால், டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மகன் பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார் ஆகியோருக்கெல்லாம் வாய்ப்புக் கொடுத்த தி.மு.க. தலைமை சிவாவின் மகன் சூர்யாவுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை. அவ்வளவு ஏன், அரசியலில் கத்துக்குட்டியான தனது மகன் உதயநிதிக்குக்கூட வாய்ப்புக் கொடுத்தார் ஸ்டாலின். அப்படி இருக்க, தனக்கு வாய்ப்புக் கொடுக்காததால் கடும் அதிருப்தியடைந்தார் சூர்யா. இந்த வருத்தம் திருச்சி சிவாவுக்கு இருந்தது என்றால் மிகையல்ல.
இந்த நிலையில்தான், சூர்யா பா.ஜ.க.வில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையில் ஏற்கெனவே பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது அண்ணாமலை கேரளாவில் இருக்கிறார், ஆகவே, அவர் தமிழ்நாடு வந்ததும் அவரை நேரில் சந்தித்து தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறாராம் சூர்யா. இதுதான் தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனையை அக்கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில், தி.மு.க.வின் முக்கிய மற்றும் மூத்த உறுப்பினரின் மகன் பா.ஜ.க.வில் இணையப்போவதாக வெளியாகி இருக்கும் செய்தி அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.