இளம்பெண்கள் பலரும் தி.மு.க.வுக்கு மட்டும் ஓட்டுப்போட மாட்டேன் என்று கூறியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டது. குறிப்பாக, பெண்களை கவரும் வகையில், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை, கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை, டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவது என்று வாக்குறுதிகளை வாரி வழங்கியது. அதேபோல, மாணவர்களின் வாக்குகளை கவரும் வகையில் நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களை வளைக்கும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டம், அனைத்துத் தரப்பு பொதுமக்களையும் கவரும் வகையில் மாதம்தோறும் மின் கணக்கெடுப்பு என இஷ்டத்துக்கு அள்ளிவிட்டனர்.
ஆனால், கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானவைகளான நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 உரிமைத்தொகை, கேஸ் மானியம் 100 ஆகியவை நிறைவேற்றப்படவில்லை. இது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர, இலவச பஸ் பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில், ஓசி பஸ் பயணம் என்று அமைச்சர் கிண்டல் செய்த விவகாரம் பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இலவச பஸ் பயணமே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு எதிர்ப்பைக் கிளப்பியது. அதேபோல, டாஸ்மாக் மதுபானக்கடை மூடும் வாக்குறுதியை நிறைவேற்றாததும் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, நீட் தேர்வு ரத்து செய்யாத விவகாரம் மாணவர்கள் மத்தியில் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில்தான், இளம் பெண்கள் பலரும் தி.மு.க.வுக்கு மட்டும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். அதாவது, தனியார் செய்திச் சேனல் ஒன்று புதிதாக வாக்களிக்கவிருக்கும் 18 வயது நிரம்பிய இளம் பெண்கள் பலரிடம் எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் பேசிய இளம்பெண்கள் அனைவருமே, யாருக்கு ஓட்டுப்போடுவோம் என்று சொல்ல மாட்டோம். ஆனால், தி.மு.க.வுக்கு மட்டும் ஓட்டுப்போட மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதுதான் எதிர்வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
தற்போது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.