இளையராஜா விவகாரத்தில் பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த ப்ளூ கிராஃப் பவுண்டேசன் என்கிற அமைப்பு “மோடியும் அம்பேத்கரும்: சிந்தனைவாதியும் செயல்வீரரும்” என்கிற தலைப்பில் தமிழக்ப் புத்தாண்டு அன்று ஒரு புத்தகத்தை வெளியிட்டது. இந்த புத்தகத்துக்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுந்தியிருந்தார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் செயல்பாடுகளைப் பார்த்தால் அம்பேத்கரே பெருமைபடுவார் என்றும், அம்பேத்கருக்கு நிகரானவர் மோடி என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம்தான் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. இளையராஜாவுக்கு ஆதரவாக சிலரும், எதிராக சிலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவு செய்தனர்.
குறிப்பாக, தி.மு.க.வினரும், திராவிடர் கழகத்தினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் இளையராஜாவுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்து வந்ததோடு, இசைஞானிக்கு எதிராக மிகவும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தனர். சிலரோ, மத்திய அரசு வழங்கும் எம்.பி. பதவிக்கு ஆசைப்பட்டுதான் அம்பேத்கரையும், மோடியையும் இணைத்து பேசினார் என்று கருத்துத் தெரிவித்தார்கள். வேறு சிலரோ, இளையராஜாவின் சொந்தக் கருத்தை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. இது கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ”பணம் வந்து விட்டால் நீங்கள் உயர்ந்த ஜாதி ஆகிவிட முடியாது. தமிழகத்தில் சில அகராதிகள் இருக்கிறார்கள். கேட்டால் உண்மையிலேயே நான் இசைமன்னன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இசைமன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசையமைப்பாளராகிவிட முடியாது. வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாதபோது கம்யூனிஸ சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள், பணமும் புகழும் வந்த பிறகு தன்னை உயர் ஜாதி என்று நினைத்துக் கொள்வது என்ன நியாயம்? நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். வயது 80-க்கு மேலாகிறது. பெயர் இளையராஜாவாம். நீங்கள் பக்திமானாவது உங்கள் விருப்பம். அதை நான் தவறென்று கூற மாட்டேன். அதற்காக அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்?” என்றார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இந்த பேச்சும், அதற்கு திராவிட கழகத் தலைவர் வீரமணி கைதட்டி சிரித்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்குப் பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் வீரமணிக்கு எதிராக பா.ரஞ்சித், மூடர் கூடம் இயக்குநர் நவீன்குமார் ஆகியோர் எதிர் கருத்து தெரிவித்தனர். இந்த சூழலில்தான் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட, தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
அருமை💐… இவர் களின் வாய் கொஞ்ச நாளாவே ஓவராகத்தான் போகுது