மாணவிகள் ‘தண்ணி, தம்’! எங்கே போகிறது தமிழகம்?

மாணவிகள் ‘தண்ணி, தம்’! எங்கே போகிறது தமிழகம்?

Share it if you like it

ஆண்கள் மட்டுமே குடித்த காலம் மலையேறி, தற்போது பெண்களும் குடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பள்ளி மாணவிகளும் தண்ணி மற்றும் தம் அடித்து கும்மாளமிடும் வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு, தமிழகம் எங்கே செல்கிறது? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியர்களுக்கு தொற்றிக் கொண்டதுதான் மதுப் பழக்கம். இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் மது விற்பனை அதிகமாக நடக்கிறது என்கிறது புள்ளி விபரம். பெரும்பாலும், மேல்தட்ட மக்களும், அடித்தட்டு மக்களான கூலித் தொழிலாளர்களும்தான் மதுவுக்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். கூலித் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடித்தே அழித்து விடுவதால் அக்குடும்பங்கள் சொல்லொனாத் துயரத்தில் இருந்து வருகின்றன. தனது தந்தை தொடர்ந்து குடித்துக் கொண்டே இருந்ததால் அவரைத் திருத்த வழி தெரியாத மாணவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் தமிழகத்தில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, இப்படித்தான் ஏழை கூலித் தொழிலாளர்களின் பணத்தை எல்லாம் லாட்டரி சீட்டு என்ற அரக்கன் விழுங்கி வந்தான். இதனால் மாநிலத்தில் தற்கொலைகள் அதிகரித்தன. இதன் காரணமாக, ஏராளமான ஏழை அபலைப் பெண்களின் தாலி பறிபோனது. இதைத் தொடர்ந்து, லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதேபோல, மது என்கிற கொடிய அரக்கனுக்கு தடை விதிக்க முடிவு செய்து முதல் கட்டமாக, 500 மதுபானக் கடைகளை மூடினார். ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் மதுவை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இதனால், கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்லாது பள்ளி மாணவ, மாணவிகளும் மது அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் மது அருந்தி விட்டு ரோட்டில் விழுந்து கிடந்த காட்சிகள் வெளியாகி காண்போர் நெஞ்சை பதற வைத்தது. இந்த நிலையில், தற்போது மாணவிகள் மது அருந்துவதும், சிகரெட் புகைப்பதுமான காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி சீருடையில் பேருந்தில் மாணவிகள் பீர் அருந்தியபடி பயணிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகின. அந்த வீடியோவில் மாணவிகள் துளிகூட அச்சமும் கூட்டமும் இன்றி, சிரித்தபடியே பீர் பாட்டிலை அருந்தியபடியே பயணம் செய்கிறார்கள். இதைப் பார்த்து விட்டு பெற்றோர்கள் பதைபதைத்தனர். இதைத் தொடர்ந்து, பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் சிகரெட் புகைப்பது போன்ற வீடியோ வெளியாகி பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

இதைப் பார்த்துவிட்டுத்தான், தமிழகம் எங்கே செல்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்களும், தேச நல விரும்பிகளும். ஏற்கெனவே, லூலூ விவகாரம் மூலம் பெரியாரிஸ்ட்களின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது மாணவிகள் மது மற்றும் சிகரெட் பிடிக்கும் நிலைக்கு வந்திருப்பது இந்த நாட்டை வெகுவிரைவில் சீரழித்து விடும் என்று குமுறுகிறார்கள். பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள்.


Share it if you like it