உயர்கல்வி உதவித்தொகை பெற எதிர்வரும் 30-ம் தேதிக்குள் மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அந்தவகையில், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரி படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்கிற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதலே இத்திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வித்துறை மேற்கொண்டிருக்கிறது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் என்கிற பெயரில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆகவே, இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான மாணவிகளிடமிருந்து சான்றிதழ்களை பெறுவதற்கு உயர்கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்துக் கல்லூரி முதல்வர்களும், மாணவிகளிடமிருந்து கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், முதலாம் ஆண்டு தவிர, பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவிகளிடம் இருந்தும் சான்றிதழ்களை பெற வேண்டும். சமூகநலத்துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், சான்றிதழ்களை பெறும் பணியை விரைந்து செயல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சான்றிதழ்களை பெற்றவுடன், சரிபார்க்கும் பணி தொடங்கும் என்று தெரிகிறது. காமராஜர் பிறந்த நாளான, கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஜூலை 15-ம் தேதி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தற்போது, முதலாம் ஆணடு சேரும் மாணவிகளுக்கு வரும் மாதங்களில் பதிவுசெய்யப்பட்டு முன்தேதியிட்டு உதவித்தொகை வழங்கப்படும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. ஆகவே, தகுதியான மாணவிகள் தங்களது விவரங்களை https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் எதிர்வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும்.
Hlo sir i’m government school student pleas studying donate