சிறிய பணம்… பெரிய மனம்… அரசு பள்ளி மாணவர்களின் தயாள குணம்!

சிறிய பணம்… பெரிய மனம்… அரசு பள்ளி மாணவர்களின் தயாள குணம்!

Share it if you like it

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு உதவும் பொருட்டு அரசு பள்ளி மாணவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை வழங்கியிருக்கும் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வாரம் 6-ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆயிரகணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில், அப்பாவி பொதுமக்கள் சுமார் 50 ஆயிரம் பேர் உயிர் இழந்ததாக சொல்லப்படுகிறது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்று சர்வதேச வல்லுனர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில், இன்று துருக்கி நாடே மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ளன. இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவும் பொருட்டு மிகப்பெரிய மீட்பு குழு ஒன்றை இந்தியா இரு நாட்டிற்கும் அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இருவர் துருக்கிக்கு தங்கள் சேமிப்பில் இருந்து நிவாரண உதவி வழங்கி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

புதுக்கோட்டை மாவட்டம், காமராஜபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் அக்பர் அலி, 47. இவரது, மகன்கள் அப்துல்மாலிக், 12. அப்துல்ரகுமான், 9. இவர்கள், புதுக்கோட்டை, பழனியப்பா கார்னர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு, அவரது தந்தை தினமும் தனது ஊதியத்தில் கிடைக்கும் தொகையில் இருந்து சிறிது பணத்தை வழங்கி வந்துள்ளார். பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதால் புதிய போன் வாங்கும் பொருட்டு தந்தை கொடுக்கும் தொகையை செலவு செய்யாமல் சகோதரர்கள் தங்களது உண்டியலில் சேர்த்து வந்துள்ளனர்.

இதனிடையே, துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த, துயர செய்தியை தொலைக்காட்சி வாயிலாக சகோதரர்கள் இருவரும் அறிந்து கொண்டனர்.

இதையடுத்து, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு தங்களது சேமிப்பான ரூ. 2,500 ரூபாயை துருக்கிக்கு நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து, தனது தந்தை அக்பர் அலியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அந்த வகையில், தங்களது சேமிப்பு தொகையை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வியிடம் வழங்கி இருக்கின்றனர். இவர்களது, சேவை மனப்பான்மையை பலர் பாராட்டி வருகின்றனர்.


Share it if you like it