அரசுப் பள்ளி மாணவர்களின் அராஜகம் திட்டமிட்ட சதியா?!

அரசுப் பள்ளி மாணவர்களின் அராஜகம் திட்டமிட்ட சதியா?!

Share it if you like it

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதன் பின்னணியில் சதித்திட்டம் இருக்கலாமோ என்கிற சந்தேகம் எழுந்திருப்பதாக கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சமீபகாலமாக அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, வகுப்பறையில் தூங்கிய மாணவனை எழுப்பிய ஆசிரியரை அந்த மாணவன் அவரது தாய், மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அந்த ஆசிரியரையும் அடிக்கப் பாய்வது போல ஒரு வீடியோ வெளியாகி கல்வித் துறையினர் மட்டுமன்ற அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல, ஒரு அரசுப் பள்ளி மாணவர் தனது தகாத செயலை கண்டித்து ஆசிரியையை மண்டையில் கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி மாணவர்களின் அராஜகத்துக்கு சாட்சியாக அமைந்தது.

மேலும், வகுப்பறையில் ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்க, கடைசி பெஞ்ச் மாணவர்கள் இருவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி, மாணவர்களின் ஒழுங்கீனத்தை பறைசாற்றியது. தவிர, வகுப்பறை நாற்காலியில் ஆசிரியர் அமர்ந்திருக்க, அவரை சுற்றிச் சுற்றி வந்து கொலைகொலையாம் முந்திரிக்கா பாடல் பாடி, மாணவர்கள் ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி மாணவர்களின் வக்கிரபுத்தியை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில்தான், வகுப்பறையில் இருந்து இரும்பு பெஞ்ச்களை உடைத்து நாசம் செய்யும் வீடியோ வெளியாகி மாணவர்களின் காட்டுமிராண்டித்தனத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் அமைந்திருக்கிறது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகள் வீடுகளுக்குச் சென்று கொண்டிருக்க, பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் மட்டும் வகுப்பறையை விட்டு வெளியேவரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த ஆசிரிய, ஆசிரியைகள் வகுப்பறைக்கு வந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது, வகுப்பறையில் இருந்த இரும்பு பெஞ்ச்களை மாணவர்கள் உடைத்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த ஆசிரியர்கள், மாணவர்களை எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், மாணவர்கள் கேட்பதாக இல்லை. எனவே, போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வருவதைப் பார்த்தவுடன் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர். இப்படி அரசுப் பள்ளி மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில்தான், மாணவர்களின் இந்த அராஜகத்துக்குப் பின்னணியில் ஏதேனும் சதித் திட்டம் இருக்குமோ என்று சந்தேகத்தை கிளப்புகிறார்கள் கல்வியாளர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் ஒருவர், “கொரோனாவுக்குப் பிறகு மாணவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும். அதேசமயம், மாணவர்களின் இத்தகைய நடவடிக்கை மாற்றத்துக்குப் பின்னணியில் தனியார் பள்ளிகளின் சதி இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது” என்று அதிர்ச்சி கொடுத்தவர், அது குறித்து விவரித்தார்.

“தற்போது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்திருக்கிறது மாநில அரசு. உதாரணமாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்டும் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளின் முன்னுரிமை உட்பட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது மாநில அரசு.

எனவே, கொரோனாவுக்கு முன்பு தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் படித்து வந்த ஏராளமான மாணவர்கள், கொரோனாவுக்குப் பிறகு, அரசுப் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதனால், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து விட்டது. ஆகவே, அரசுப் பள்ளிகள் மீது அவப்பெயரை ஏற்படுத்தி, பெற்றோரின் கவனத்தை மீண்டும் தனியார் பள்ளிகள் பக்கம் திரும்ப வைக்க வேண்டும் என்பதற்காக, தனியார் கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, அரசுப் பள்ளி மாணவர்கள் தூண்டிவிட்டு, இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபட வைக்கின்றனவோ என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆகவே, இது தொடர்பாக கல்வித்துறை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஓகோ அப்படியும் இருக்கலாமோ!


Share it if you like it