அத்வானி மதுரை வருகையின்போது குண்டுவைத்த பயங்கரவாதிகள் கன்னியாகுமரி மசூதியில் இருப்பதாக இஸ்லாமிய பெண்கள் போலீஸில் புகார் கொடுத்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கோவையில் உரையாற்றுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை சீர்குலைக்கும் நோக்கில் கோவை மாநகரின் 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள். இதில் 46 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு அல் உம்மா பயங்கரவாதிகள்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து, அல் உம்மா அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு அந்த அமைப்பினர் வெவ்வெறு பெயர்களில் இயங்கி வந்தனர். தற்போதும் இயங்கி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராக மதுரையில் பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார் அத்வானி. இந்த நிகழ்ச்சியை சீர்குலைக்கும் வகையிலும் பல்வேறு இடங்களில் டைம்பாம், பைப் குண்டுகளை வைத்திருந்தனர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதில், சில இடங்களில் குண்டுகள் வெடித்த நிலையில், பல இடங்களில் போலீஸார் குண்டுகள் வெடிப்பதற்கு முன்பு பறிமுதல் செய்தனர். அந்த வகையில், அத்வானி செல்ல திட்டமிட்டிருந்த திருமங்கலம் அருகே ஆலம்பட்டி ஓடைப்பாலம் அடியில் இருந்து 2 பைப்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்ல, மதுரையில் பல்வேறு இடங்களில் டைம்பாம், பைப்குண்டுகள், டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் என தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் இருந்தது.
இதுபோன்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதை மெய்ப்பிக்கும் வகையில், மதுரைக்கு அத்வானி வந்தபோது குண்டு வைத்தவர்கள் கன்னியாகுமரி மசூதியில் இருப்பதாக இஸ்லாமிய பெண்களே போலீஸில் புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் சிலர்தான் இப்படியொரு புகாரை கொடுத்திருக்கிறார்கள். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில் ஒரு மசூதி இருக்கிறது. இந்த மசூதியை நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த பிரச்னை சமீபகாலமாக உச்சத்தில் இருந்து வருகிறது.
இந்த சூழலில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நாகர்கோவிலைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் சிலர், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து ஒரு புகார் மனு அளித்திருக்கிறார்கள். அதில், எதிர் தரப்பினர் தங்களை மிரட்டி வருவதாகவும், அவர்களில் சிலர் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மதுரை வந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதுதான் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.