கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிடத்தை பூர்த்தி செய்து தமிழகத்தின் முகமாக மாறி வருகிறார் அண்ணாமலை என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்குப் பிறகு மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்தவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும்தான். தமிழகத்தின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு 2016 செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 74 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனின்றி, டிசம்பர் மாதம் 5-ம் தேதி உயிரிழந்து விட்டார். தனது தொட்டில் குழந்தைகள் திட்டத்துக்காக ஐ.நா. சபையால் பாராட்டப்பட்டவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்த இவர், அக்கட்சியை ராணுவ கட்டுக்கோப்புடன் நடத்தியது அனைவராலும் ஆச்சரியமாகப் பேசப்பட்டது. இவர் 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறார்.
அதேபோல, அரசியலில் கருணாநிதிதான் மூத்தவர். அண்ணாதுரை காலத்திலேயே அரசியல் செய்தவர். தமிழகத்தின் முதல்வராக இருந்த அண்ணாதுரை மறைந்த பிறகு, 1969-ம் ஆண்டு முதன் முறையாக முதலமைச்சர் பதவியை கைப்பற்றினார். இதுவரை 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார். சினிமா கதாசிரியராக இருந்த இவருக்கு நடிகர் எம்.ஆர்.ராதா கொடுத்த பட்டம்தான் கலைஞர். இப்பெயர்தான் இவரது இறுதிநாள் வரை நீடித்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார்.
தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்த இவர்கள் இருவரும் மறைந்த பிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. அந்த வெற்றிடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்கிற கேள்வி இருந்து வந்தது. ஆனால், அந்த இடத்தை இதுவரை யாருமே நிரப்பவில்லை. இந்த நிலையில்தான், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத அந்த வெற்றிடத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிரப்பி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
அண்ணாமலை பி.இ., எம்.பி.ஏ. பட்டங்களை முடித்து விட்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அப்போது, கர்நாடக சிங்கம் என்று அம்மாநில மக்களால் அழைக்கப்பட்டவர். போலீஸ் அதிகாரியாக இருந்தபோது, சிறப்பான சேவைக்காக பல விருதுகளை பெற்றவர். இவர் சிக்மங்களூர் மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டபோது, அம்மாவட்ட மக்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், என்ன காரணத்தினாலோ திடீரென 2019-ம் ஆண்டு தனது ஐ.பி.எஸ். பணியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர், 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி பா.ஜ.க.வில் இணைந்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு, தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்ப்பதற்காக அரும்பாடு பட்டார். இவரது செயல்பாடுகளைப் பார்த்து ஏராளமான இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர், இணைந்தும் வருகின்றனர். அதேபோல, மாற்றுக் கட்சியினரும் பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள். மேலும், ஆளும்கட்சி செய்யும் ஊழலை அம்பலப்படுத்துவது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தக்க பதிலடி கொடுத்து தவிடுபொடியாக்குவது என சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
மேலும், மக்கள் சேவையில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, கடந்தாண்டு பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க தானே களத்தில் இறங்கினார். தவிர, மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் ஈடுபட்டனர். டூவீலர் இல்லாமல் சைக்கிளில் சென்று உணவு டெலிவரி செய்த பெண்ணுக்கு ஸ்கூட்டி வழங்கி உதவினார். துப்புரவுப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
இப்படியான இவரது அதிரடி செயல்பாடுகளைப் பார்த்து ஆளும் தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மிரண்டுபோய் கிடக்கின்றன. அதேபோல, நிருபர்களின் கேள்விகளுக்கு நிதானமாகவும், அதேசமயம் மிகவும் தெளிவாகவும் பதில் கூறிவருகிறார். அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி விமர்சிக்கும்போதும் கண்ணியமான வார்த்தைகளையே பயன்படுத்தி வருகிறார். மொத்தத்தில் மிகவும் சிறந்த அரசியல் தலைவராக வலம் வருகிறார். இப்படிப்பட்ட அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்த்துவிட்டுத்தான், கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழகத்தின் முகமாக மாறிவருகிறார் அண்ணாமலை என்றும், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய ஆளுமைகள் இல்லாத வெற்றிடத்தை அண்ணாமலை நிரப்பி விட்டார் என்றும் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.