இந்த படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா மக்களே…?
இவர்தான் கோவக்கார கோவன். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் வெறியர். அக்கட்சியின் கலை இலக்கிய பிரிவின் நிர்வாகியாக இருக்கிறார். நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்தால் கோவனுக்கு பயங்கரமாக கோவம் வரும். அது அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளாக இருந்தால் மட்டும்தான். இதே தி.மு.க. அண்கோ கம்பெனிகள் என்றால் கப்சிப்தான். அப்போ மட்டும் வாயை வாடகைக்கு விட்டிருவாருன்னு பேசிக்கிறாங்க. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். குறிப்பாக, டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக அரசு வருவாய் ஈட்டுவதாகக் கூறி பயங்கரமாக கோவப்பட்ட கோவன், தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அரசை விமர்சித்து பாட்டெல்லாம் பாடி பயங்கரமாக புரட்சி செய்தார்.
அதேபோல, 8 வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விமர்சித்து பாட்டுப் பாடி மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், கொஞ்ச நாளாவே ஆளைக் காணும். குறிப்பாக, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கோவனை காணவில்லை என்று மக்கள் போர்டு, போஸ்டர் ஒட்டாத குறைதான். அதேபோல, கோவனின் புரட்சிப் பாட்டெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 8 வழிச்சாலைத் திட்டம், தற்போதைய தி.மு.க. ஆட்சியில் பயண நேரக் குறைப்பு சாலை என்கிற பெயரில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. மேலும், டாஸ்மாக் வருவாயை பெருக்கும் வகையில், மதுபானங்களின் விலையையும் தி.மு.க. அரசு உயர்த்தி இருக்கிறது. தவிர, மத்திய அரசு திட்டங்களுக்கெல்லாம் தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. ஆனால், கோவன் மட்டும் வாய் திறக்கவும் இல்லை, ஆளையும் காணவில்லை.
எனவே, கோவன் எங்கிருக்கிறார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டோம். அப்போதுதான் அவர் பாண்டிச்சேரியில் இருக்கும் விஷயம் நமக்குத் தெரியவந்தது. தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு பாண்டிச்சேரியில் என்ன வேலை என்று தெரிந்து கொள்ள களத்தில் இறங்கினோம். அப்போதுதான் தெரிந்தது, கோவன் பாண்டிச்சேரியில் மதுவிலக்கை எதிர்த்து புரட்சி செய்யப் போயிருக்கிறார் என்பது. அதாவது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடக்கிறது. இக்கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் இருக்கிறது. ஆகவே, கூட்டணிக் கட்சியை எதிர்த்து போராட்டம் பண்ண முடியுமா? அதேசமயம், கோவனின் பாடின வாயையும், ஆடின காலையும் நிறுத்த முடியுமா? முடியவில்லை. ஆகவே, பா.ஜ.க. கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலமான பாண்டிச்சேரிக்கு புரட்சி செய்ய புறப்பட்டிருக்கிறார் கோவன் என்கிற தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவனின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தங்களது கட்சியான கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் என்ன தவறு நடந்தாலும், தாங்கள் கூட்டணி அமைத்திருக்கும் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் எந்த தவறு நடந்தாலும் கோவனுக்கு கோவம் வராது என்பது மக்கள் மத்தியில் அம்பலமாகி இருக்கிறது. கோவன் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியினர், தி.மு.க. கூட்டணிக் கட்சியினர், தமிழகத்தில் போராளிகள் என்ற பெயரல் உலா வரும் பியூஸ் மானுஷ், திருமுருகன் காந்தி, சுப.உதயகுமார் உள்ளிட்ட அனைவருமே போலி போராளிகள், சமூக ஆர்வலர்கள்தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.