மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் இருக்கை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தி.மு.க. – அ.தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீதான தாக்குதல் ஆகிய சம்பவங்களால் அசாதாரண சூழல் நிலவியது.
மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் இருக்கின்றன. இதில், தி.மு.க. கூட்டணி 80 இடங்களிலும், அ.தி.மு.க. 15 இடங்களிலும், பா.ஜ.க. 1 இடத்திலும், மற்றவை 4 இடங்களிலும் வெற்றிபெற்றன. மேயர் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த இந்திராணி வெற்றிபெற்றார். துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.நாகராஜன் இருந்து வருகிறார். ஆணையராக கா.ப.கார்த்திகேயன் இருக்கிறார். இந்த சூழலில், மதுரை மாநகராட்சியின் 2022- 23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் மே 11-ம் தேதி காலை 11:30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, மாநகராட்சியின் 100 வார்டுகளின் கவுன்சிலர்களும் வருகை தந்தனர்.
கூட்டத்தில், வார்டு எண் வாரியாக கவுன்சிலர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் 15 பேரும், தங்களுக்கு மட்டும் தனியாக இருக்கை ஒதுக்கிக் தருமாறு ஏற்கெனவே நடந்த கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், இந்த முறையும் தனியாக இடம் ஒதுக்காமல், வார்டு எண் வாரியாகவே ஒதுக்கப்பட்டிருந்ததால் அதிருப்தி அடைந்தனர். ஆகவே, தாங்களாகவே 15 இருக்கைகளை தேர்வு செய்து வரிசையாக அமர்ந்து கொண்டனர். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக, தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதல் முற்றிய நிலையில், தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் மீது ஏறி நின்று வாக்குவாதம் செய்தார். இதனால், இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளியே செல்ல வேண்டும் என்று தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். இந்த சமயத்தில், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் மன்றத்தில் இல்லை. எனவே, இருக்கை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, மேயரை சந்தித்து முறையிடுவதற்காக, அ.தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் சென்றனர். இது தொடர்பாக, செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்களும் உடன் சென்றனர். அப்போது, மேயர் அறையில் இருந்த தி.மு.க. ரவுடிகள் சிலர், செய்தியாளர்களை உள்ளே விடாமல் தடுத்ததோடு, தொலைக்காட்சி கேமராமேன்களை காலால் எட்டி உதைத்துத் தள்ளி, கேமராவையும் உடைத்தனர். இதை கண்டித்து செய்தியாளர்கள் மேயர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, காலை 11.30 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் 12.45 மணிக்குத்தான் தொடங்கியது. பின்னர், மேயர் பேசியபோது, அடுத்த கூட்டத்தில் அ.தி.மு.க.வினருக்கு தனியாக இருக்கை ஒதுக்கப்படும் என்றார். மேலும், செய்தியாளர்களை தி.மு.க.வினர் தாக்கியதற்கு வருத்தம் தெரிவித்த மேயர் இந்திராணி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதனிடையே, மதுரை மாநகராட்சி மேயர் அறை முழுக்க முழுக்க தி.மு.க. குண்டர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தி.மு.க. பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் முழுக்க அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் மாமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் மற்றும் அவரது ஆதரவாளர்களும் மேயர் அறையை ஆக்கிரமித்திருப்பதாக குமுறுகிறார்கள். மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை மிரட்டி, தங்களது சொந்தப் பணியில் ஈடுபடுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்கள். மதுரை மாநகராட்சியில் நடந்த தி.மு.க.வினரின் இந்த அராஜக செயல் தொடர்பான காணொளி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.