அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், தற்போது அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்யவும் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2011-16 அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அத்துறையில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், விடுவிக்க மறுத்து மனுவை தள்ளிபடி செய்து விட்டது நீதிமன்றம். இதேபோல, 2006-11 தி.மு.க. ஆட்சியில் கனிமவளத்துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த அமைச்சர் பொன்முடி செம்மண் திருடியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரையும் விடுவிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.
இந்த நிலையில்தான், முறைகேடாக வீட்டுமனைகள் வழங்கிய வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்து மனுவையும் தள்ளுபடி செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, அரசு விருப்புரிமை ஒதுக்கீடுயில் வீட்டுமனைகள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2008-ம் வருடம் ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி சுயலாபம் அடைந்ததாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி, அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட், அவரது மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக 2013-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை பதிவு செய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறாததால், ஜாபர் சேட், வீட்டுவசதி வாரியத்தின் அப்போதைய செயல் பொறியாளர் முருகையா மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர், அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர் சேட்டின் மனைவி பர்வின் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 2019- குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரியசாமி, பர்வின் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், வழக்கை தொடர போதுமான ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டு, வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, செந்தில்பாலாஜி, பொன்முடியைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.