அமலாக்கத்துறையின் அதிரடி கைது நடவடிக்கையால் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி இருக்கிறார் செந்தில்பாலாஜி. இதனால், அறிவாலய வட்டாரம் கடும் அதிர்ச்சி மற்றும் அப்செட்டில் இருக்கிறது.
கடந்த மாதம் 26-ம் தேதி கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, டாஸ்மாக், மின்சார வாரிய கான்ட்ராக்டர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது. அப்போது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், தி.மு.க.வினர் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவர்கள் சென்ற காரையும் அடித்து நொறுக்கினர். இதில் காயமடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார்கள்.
இந்த நிலையில்தான், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று காலை 8 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினார்கள். ஏற்கெனவே வருமான வரித்துறை சோதனை நடந்தபோது, தி.மு.க.வினர் தாக்குதலில் ஈடுபட்டதால், இந்த முறை மத்திய போலீஸ் பாதுகாப்புப் படை உதவியுடன் சோதனை நடைபெற்றது.
நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். உடனே, செந்தில்பாலாஜி தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறவே, அவரை ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.