தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை 10,000 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. வில்சன் நாடாளுமன்றத்தில் கூறினார். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெறும் 1,200 கோடி ரூபாய்தான் தர வேண்டும். அதுவும் தமிழகத்திலிருந்து பயன்பாட்டு சான்றிதழ் தந்தால் மட்டுமே விடுவிக்க முடியும் என்று கூறி, வில்சனை நோஸ் கட் செய்திருக்கிறார்.
பொதுவாக, ஜி.எஸ்.டி. ரிட்டன் என்பது வணிகர்களால் தாக்கல் செய்யப்படுவதுதான். ஆனால், பெரும்பாலான வணிகர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறைதான் ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வார்கள். இதனடிப்படையில்தான், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இதுவும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு விற்பனை செய்யும்போதோ அல்லது பொருட்கள் வாங்கும்போதோ விதிக்கப்படும் சேவைக்கு மட்டும்தான். அதேசமயம், மாநிலத்துக்குள் விற்பனை செய்யும் வணிகர்கள் ஜி.எஸ்.டி. தாக்கல் செய்த தினத்தன்றே அம்மாநில அரசின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டும்.
உதாரணமாக, தமிழ்நாட்டிற்குள் வணிகர்கள் விற்பனை செய்யும்போது, ஜி.எஸ்.டி. தாக்கல் செய்த அன்றையதினமே தமிழக அரசின் கணக்கில் நேரடியாக நிலுவை தொகை வரவேற்கப்படும். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. மேலும், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை என்பது ஒவ்வொரு செட்டில்மென்ட்டுக்கும் ஒரு காலக்கெடு இருக்கிறது. அதன்படிதான், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை வழங்கப்படும். ஆனால், அரசியல்வாதிகள் உட்பட பலரும் இதை புரிந்துகொள்ளாமல் ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை இருப்பதாக கருத்துக் கூறிவருகின்றனர். இது ஜி.எஸ்.டி. குறித்த புரிதல் இல்லாதது ஒருபுறம் என்றால், மறுபுறம் முற்றிலும் அரசியல் காரணங்களுக்குத்தான்.
அந்த வகையில்தான், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை 10,000 கோடி ரூபாய் இருப்பதாகவும், இதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தி.மு.க.வைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யான வில்சன், எவ்வித ஆதாரமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் பேசினார். இவர் மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரும், மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை தரவில்லை என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. ஒருவர், பழைய பல்லவியையே மீண்டும் மீண்டும் படிக்கொண்டிருக்கவே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாகி விட்டார். “நாடு முழுவதுமே நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி. தொகை 17,000 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், தமிழகத்திற்கு மட்டும் 10,000 கோடி ரூபாய் என்று சொல்கிறீர்கள். தமிழகத்துக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை 10,000 கோடி ரூபாய் அல்ல. வெறும் 1,200 கோடி ரூபாய் மட்டுமே” என்று பதிலளித்தார். மேலும், தமிழகத்திலிருந்து பயன்பாட்டு சான்றிதழ் தந்தால் மட்டுமே இத்தொகையையும் விடுவிக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.