தமிழ் சினிமாவில் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் தி.மு.க. அரசில் அரங்கேறி வருவதுதான் மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் பரத், தமன்னா நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘கண்டேன் காதலை’. இப்படத்தில் ஒரு காமெடி காட்சி இடம்பெற்றிருக்கும். காமெடி நடிகர் சந்தானம் ஊர் மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை கொடுப்பதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அக்காட்சியில் ஒரே ஒரு வேட்டி, ஒரே ஒரு சேலையை மட்டும் வைத்துக் கொண்டு, ஊர் மக்கள் அனைவருக்குமே கொடுத்து விடுவார் சந்தானம். அதாவது, ஒருவரிடம் கொடுக்கும் வேட்டி மற்றும் சேலையை வாங்கி மறுபடியும் இன்னொரு கொடுப்பார். இப்படியாக எல்லோருக்கும் கொடுப்பார். நகைச்சுவைக்காக இப்படியொரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதேபோல, தி.மு.க. அரசிலும் ஒரு காமெடி காட்சி அரங்கேறி இருக்கிறது.
தமிழகத்தில் “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021 -2022” என்கிற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்தபடியே காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி கார்கூடல்பட்டி பஞ்சாயத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் தி.மு.க. எம்.பி. ராஜேஸ்குமார். இவ்விழாவில், கலெக்டர் ஸ்ரேயாவும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக 55 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
சென்னையில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்ததும், நாமக்கல்லில் எம்.பி. ராஜேஸ்குமாரும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கத் தொடங்கினார். இதில், வேடிக்கை என்னவென்றால், தேர்வு செய்யப்பட்டிருந்த பயனாளிகள் 55 பேர். ஆனால், நலத்திட்ட உதவிகள் அடங்கிய 3 பைகளை மட்டுமே அதிகாரிகள் கொண்டு வந்திருந்தனர். ஆகவே, ஒரு பயனாளியிடம் எம்.பி. ராஜேஸ்குமார் வழங்கிய பையை, அவர் மேடையை விட்டு இறங்கும் முன்பு அவரிடமிருந்த அந்தப் பை பிடுங்கப்பட்டது. இதனால், பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்தப் பை அடுத்தடுத்து வந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இப்படியாக 3 பையை மட்டும் வைத்துக் கொண்டு 55 பயனாளிகளுக்கும் வழங்கிய கூத்து அரங்கேறியது.
இதைப் பார்த்த பொதுமக்கள், ஓகோ இதுதான் திராவிட மாடல் ஆட்சிபோல என்று கிண்டலும் கேலியும் செய்தனர்.