தமிழகத்தில் 45 இடங்களில் நடந்த சோதனையில் சென்னையில் மட்டும் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், தமிழ்நாடு பயங்கரவாதிகளின் புகழிடமாக மாறிவருகிறதோ என்கிற கேள்வியும், அச்சமும் எழுந்திருக்கிறது.
கோவை நகரிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில், உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் பலியானார். முதலில் இது காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து என்றுதான் கருதப்பட்டது. ஆனால், காருக்குள் சிதறிக் கிடந்த ஆணிகள் மற்றும் பால்ரஸ், கோழி குண்டுகள் ஆகியவை இது ஒரு பயங்கரவாத சதி என்பதை உறுதிப்படுத்தியது. இதுவும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால்தான் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் முபீனுக்கு உடந்தையாக இருந்ததாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் பிறகு, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த வாரம் விசாரணையைத் தொடங்கிய என்.ஐ.ஏ., கார் வெடிப்பு ஒரு திட்டமிட்ட சதி என்பதை உறுதி செய்தது. இதனிடையே, தீயில் கருகி முபீன் உயிரிழக்கவில்லை. காரில் இருந்த ஆணி அவரது இதயத்தில் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கோவையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடந்தது. தவிர, சென்னை, நாகப்பட்டினம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில்தான் சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, தமிழ்நாடு பயங்கரவாதிகளின் புகழிடமாக மாறிவருகிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும், இது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.