பகுதி நேர ஆசிரியர்களிடம் தி.மு.க.வினர் வசூல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வந்தது. இதையடுத்து, ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு, கடந்த 2011-ம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், நேர்காணல் மூலம், இந்த பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், பகுதிநேர ஆசிரியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 5,000 ரூபாய் மட்டுமே சம்பளம் உயர்த்தப்பட்டு, தற்போது மாதம் 10,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளை கடந்தும், வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. இதையடுத்து, பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சியில் மாநாடு நடத்த பகுதி நேர ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அதன்படி, இம்மாநாடு விரைவில் நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆகியோரை அழைத்திருக்கிறார்கள். இருவரும் கலந்துகொள்ள இசைவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான், மேற்படி மாநாட்டில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள் மூலம் பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்றுவதாகச் சொல்லி, பகுதி நேர ஆசிரியர்களிடம் தி.மு.க.வினர் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதை நம்பி பலரும் பணம் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் எப்படியோ வெளியில் கசிந்து விட்டது. இதையடுத்து, கோவையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தி.மு.க.வினர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதை ஆடியோ உள்ளிட்ட உரிய ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். மேலும், இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதைத் தொடர்ந்து, மேற்படி வசூல் வேட்டை குறித்து விசாரித்து உரிய அறிக்கை தருமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த விவகாரம்தான் தற்போது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
https://www.facebook.com/watch/?v=5558181590896578