பிரதமர் வீடு கட்ட லஞ்சம்: விரக்தியில் வாலிபர் தற்கொலை!

பிரதமர் வீடு கட்ட லஞ்சம்: விரக்தியில் வாலிபர் தற்கொலை!

Share it if you like it

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அதிகாரி லஞ்சம் கேட்டு நச்சரித்ததால், விரக்தியடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் அருகேயுள்ள வேலங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட கமுதக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின் என்பவரது மகன் மணிகண்டன். 25 வயதாகும் இவருக்கு கடந்தாண்டுதான் திருமணம் நடந்தது. ஆகவே, கூரை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த மணிகண்டன், கான்கிரீட் வீடு கட்ட ஆசைப்பட்டார். மேலும், வீட்டை கட்டி முடித்து விட்டு, வெளிநாடு சென்று வேலை பார்த்து சம்பாரிக்க திட்டமிட்டிருந்தார். எனவே, ஆவாஸ் யோஜனா எனப்படும் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்தார். இதில், வீடு கட்டிக் கொள்ள அரசிடமிருந்து மணிகண்டனுக்கு அனுமதி கிடைத்தது.

இதையடுத்து, நன்னிலம் யூனியன் அலுவலகத்திற்குச் சென்று கேட்டிருக்கிறார். அப்போது, அங்கு ஓவர்சியராக பணிபுரியும் மகேஸ்வரன் என்பவர், வீடு கட்ட அனுமதி கடிதம் வழங்குவதற்கு அட்வான்ஸ் தொகையாக 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். மணிகண்டனும் 3,000 ரூபாய் லஞ்சம் கொடுத்து அனுமதி கடிதம் வாங்கினார். பின்னர், ஏற்கெனவே குடியிருந்து வரும் கூரை வீட்டின் எதிர்ப்புறம் உள்ள இடத்தில் பிரதமர் வீடு கட்ட ஆரம்பித்திருக்கிறார். ஆனால், பேஸ்மென்ட் போட்ட பிறகுதான் முதல் தவணை பணம் வரும் என்று கூறியிருக்கிறார் மகேஸ்வரன். எனவே, கடன் வாங்கியும், வீட்டிலிருந்த நகையை அடமானம் வைத்தும் கட்டட வேலையை ஆரம்பித்த மணிகண்டன், பேஸ்மென்ட்டும் போட்டு முடித்தார். ஆனாலும் பில் பணம் வரவில்லை.

இதுகுறித்து ஓவர்சியர் மகேஸ்வரனிடம் கேட்டதற்கு, லிண்டல் வரை முடிந்த பிறகுதான் பில் பாஸாகும் என்று கூறியிருக்கிறார். எனவே, மீண்டும் கடனை வாங்கி லிண்டல் வரை கட்டிவிட்டார். அதன் பிறகு, மகேஸ்வரனிடம் சென்று கேட்டதற்கு, நான் அளந்து தருவதற்கு முன்பே நீ வீடு கட்டத் தொடங்கி விட்டாய். ஆகவே, உனக்கு பில் பாஸ் பண்ண முடியாது என்று கூறியிருக்கிறார் மகேஸ்வரன். இதனால், அதிர்ச்சியடைந்த மணிகண்டன் கெஞ்சிக் கேட்கவே, 15,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் பில் பாஸ் செய்வதாகக் கூறியிருக்கிறார். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்றும், பில் பாஸானவுடன் பணம் தருவதாகவும் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, பில் பாஸ் செய்த மகேஸ்வரன், பணம் அக்கவுன்ட்டில் ஏறியதும், 15,000 ரூபாயை கேட்டு வாங்கிக் கொண்டார்.

பின்னர், மோல்டு போட்டதும் அடுத்த தவணைத் தொகை தருவதாகக் கூறியிருக்கிறார். ஆகவே, தான் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த பணம் 50,000 மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியதோடு, கடனாக 36,000 ரூபாய்க்கு கம்பியும் வாங்கி மோல்டு போட்டிருக்கிறார். இதன் பிறகு, ஓவர்சியர் மகேஸ்வரனை தொடர்புகொண்டு கேட்டதற்கு சரியான பதில் இல்லை. இதனால், மனமுடைந்த மணிகண்டன், நேற்று விஷம் குடித்துவிட்டு, மேற்கண்ட விவரங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதைப் பார்த்து விட்டு, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, லஞ்சம் கேட்ட மகேஸ்வரனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.

அரசு ஊழியர் ஒருவரின் லஞ்ச டார்ச்சரால் அப்பாவி இளைஞர் உயிரிழந்திருக்கும் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையறிந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் வீடு கட்ட லஞ்சம் கொடுக்க முடியாமல் ஒரு அப்பாவி இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பிரதமர் கொடுக்கும் திட்டத்தை பயனாளிகளுக்கு கொடுக்க மறுப்பதற்காக தமிழக முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த இளைஞனின் கனவுகளையும் வாழ்க்கையையும் பறித்த தி.மு.க. அரசு, அதற்கான விலையை நிச்சயம் கொடுக்கும். சாமானியர்களின் துன்பங்களுக்கு செவிடாகவும், ஊமையாகவும் இருந்து, பல உயிர்களை பறிக்க இந்த அரசை விடமாட்டோம். இன்று மாலை திருவாரூர் அருகே உள்ள நன்னிலம் சென்று மணிகண்டன் உடலுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it

One thought on “பிரதமர் வீடு கட்ட லஞ்சம்: விரக்தியில் வாலிபர் தற்கொலை!

  1. தகுந்த நடவடிக்கை தேவை… சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான சிறை தண்டனையும்… உதவி தோகை கொடுத்து உதவ வேண்டும்.

Comments are closed.