செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளின் சொத்துக்கள் முடக்கம்!

செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளின் சொத்துக்கள் முடக்கம்!

Share it if you like it

சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளின் ரூ.3.37 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி இருக்கிறது.

1920-ம் ஆண்டு முதல் இந்தியாவில் செஞ்சிலுவைச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் தமிழக கிளை அதே ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், தமிழக கிளையின் தலைவராக ஹரிஷ் எல்.மேத்தா, பொருளாளர் செந்தில்நாதன், பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸ்ரூதீன் ஆகியோர் இருந்த காலக்கட்டத்தில், செஞ்சிலுவை சங்கத்திற்கு வந்த நிதியை சட்டவிரோதமாக தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020-ம் ஆண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், மேற்படி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதனடிப்படையில் அமலாக்கத் துறையும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, நிதி நிறுவனம் தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்து புலன் விசாரணையை தொடங்கியது. இதில், தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, பொருளாளர் செந்தில்நாதன், பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸ்ரூதீன் ஆகியோர் பணிக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நிதியை பெற்று, சட்டவிரோதமாக மோசடி செய்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து, 3 நிர்வாகிகள் மீதும் 2020-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் விசாரணையில் பல கோடி ரூபாய் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸ்ருதீன் ஆகியோர் செஞ்சிலுவை சங்கத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, அதிக அளவில் சொத்துகளை சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேருக்குச் சொந்தமான 3.37 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருக்கிறது.


Share it if you like it