ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது. உச்ச நீதிமன்றத்தில்தான் செய்ய முடியும் என்று சொல்லி திருமாவளவனின் மனுவை நிராகரித்து விட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ஜம்மு காஷ்மீர் உட்பட நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, தமிழகத்திலும் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தமிழக காவல்துறை செப்டம்பர் 28-ம் தேதிக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செய்து வருகிறது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை வாபஸ் பெறக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரி, நீதிபதி இளந்திரையன் முன்பு முறையீடு செய்யப்பட்டது. ஆனால், ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்த வழக்கில், வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாத நிலையில், மனுவை எப்படி விசாரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அவசர வழக்காக விசாரிக்கவும் மறுத்து விட்டார். மேலும், மனுவுக்கு எண் வழங்கும் நடைமுறை முடிந்த பின்னரே விசாரிக்க முடியும் என்றும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது. ஆகவே, திருமாவளவனின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. குற்றவியல் சார்ந்த வழக்கு என்பதால் உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்று உத்தரவிட்டிருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்லவத்திற்கு அனுமதி கோரி, திருவள்ளூர் காவல் நிலையத்தில் அந்த அமைப்பினர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதற்கு போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். இதையடுத்து, இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. மற்றும் உள்துறைச் செயலாளர், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.