தமிழ்த் திரைப்பட உலகை திருப்பிப் பார்க்க வைத்த ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை எந்த தொலைக்காட்சி சேனலும் வாங்கக் கூடாது என்று ஆட்சியாளர்கள் மறைமுக உத்தரவிட்டிருப்பதாகவும், இதனால் அப்படத்தை விற்க முடியவில்லை என்றும் வேதனை தெரிக்கிறார்கள் படக்குழுவினர்.
2021-ம் ஆண்டு ரிலீஸாகி, தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘ருத்ர தாண்டவம்’. 2020-ம் ஆண்டு வெளியாகி தமிழ்த் திரைப்பட உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ‘திரௌபதி’ படத்தை இயக்கிய மோகன் ஜிதான் இப்படத்தின் இயக்குனர். ‘திரௌபதி’ படத்தில் கதாநாயகனாக நடித்த அதே ரிச்சர்டு ரிஷிதான் இப்படத்திலும் ஹீரோ. இப்படத்தின் இசையமைப்பாளரும் ‘திரௌபதி’ படத்துக்கு இசையமைத்த ஜூபின்தான். ஏற்கெனவே, இதே குழு இணைந்து ‘பழையவண்ணாரப்பேட்டை’ என்கிற படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட 3 திரைப்படங்களும் வெவ்வேறு கதையம்சங்களை கொண்டவை என்றாலும், அரசியலையும், ஜாதி, மத அரசியலையும் தோலுறித்துக் காட்டியவை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
குறிப்பாக, ‘ருத்ர தாண்டவம்’ படம் மதத்தை வைத்தும், ஜாதியை வைத்தும் எப்படி.யெல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. வில்லான வரும் திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன், ஒரு காட்சியில் கருப்புச் சட்டையும், மற்றொரு காட்சியில் ஊத சட்டையும் அணிந்து வருவது குறிப்பிட்ட கட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. மேலும், பி.சி.ஆர். சட்டம் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குனர் மோகன் ஜி. அதேபோல, கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ், ஹிந்து மத கடவுள்களை சாத்தான்கள் என்று கூறிய காட்சி, இப்படத்தில் பிரதானமாக இடம்பிடித்திருந்தது.
தவிர, எப்படியெல்லாம் மதம் மாற்றம் செய்கிறார்கள், போதைப் பொருள் கடத்தலுக்கு மதத்தையும், ஜாதியையும் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதையெல்லாம் பக்காவாக காட்சிப்படுத்தி, அரசியல்வாதிகள் முதல் மத அடிப்படைவாதிகள் வரை அனைவரையும் கிழித்து தொங்கவிட்டு விட்டார் இயக்குனர் மோகன் ஜி. மேலும், நாட்டு மக்களுக்காக சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர், ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. எல்லா ஜாதியினருக்கும் சொந்தமானவர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து, ஜாதி அரசியல் செய்யும் தலைவர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார் இயக்குனர். உச்சக்கட்டமாக, படத்தில் காட்டப்படும் அரசியல் கட்சித் தலைவர்கள், நிஜத்தில் சில அரசியல் கட்சிகளின் தலைவர்களை நினைவுப்படுத்துவதாக இருக்கிறது. இப்படியெல்லாம் காட்சிகள் வைத்தால், அரசியல்வாதிகளால் பொறுக்க முடியுமா? ஆகவே, படக்குழுவினருக்கு குடைச்சலை கொடுத்திருக்கிறார்கள்.
அதாவது, ‘ருத்ர தாண்டவம்’ படம் தியேட்டர்களில் வெளியாகி கணிசமான வசூலை குவித்து விட்டது ஒருபுறம் இருந்தாலும், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஏதேனும் தொலைக்காட்சி சேனலுக்கு விற்பனை செய்தால்தான் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால், இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை எந்த தொலைக்காட்சி சேனலும் வாங்க முன்வரவில்லையாம். படக்குழுவினர் நேரடியாகச் சென்று கேட்டும், அனைவருமே வாங்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. விசாரித்ததில், ஆட்சியாளர்களின் மறைமுக உத்தரவுதான் காரணம் என்பது தெரியவந்திருக்கிறது. இதுதான் படக்குழுவினரை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது. நாட்டில் நடக்கும் அநியாயங்களையும், அட்டூழியங்களையும் சுட்டுக்காட்டுவதும், தட்டிக் கேட்பதும் தவறா? என்று குமுறி வருகிறார்கள். மேலும், தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நியாயம் கேட்டு வருகின்றனர்.