மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சேலம் குப்பை மேடு பசுமைப் பூங்காவாக மாறி வருகிறது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பைகள் அகற்றப்பட்டு மாநகராட்சிக்குச சொந்தமான ஒதுக்குப்புறமான இடங்களில் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம். இவற்றை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் மக்கா குப்பைகள் என தரம்பிரிக்கப்பட்டு உரமாகவும், மறுசுழற்சி செய்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், சென்னை போன்ற மிகப்பெரிய மாநகராட்சிகளில் சேரும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படுத்தினாலும், ஏராளமான குப்பைகள் மீதம் தேங்கிவிடுகின்றன. எனவே, அக்குப்பைகளை கோடைகாலத்தில் எரித்துவிடும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் தேங்கும் குப்பைகள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள எருமாபாளையத்தில் 19.33 ஏக்கர் பரப்பளவில் சேகரித்து வைக்கப்பட்டு வந்தது. ஆனால், எருமாபாளையத்தில் வசிக்கும் மக்கள் குப்பைகளால் ஏற்படும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி, குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பயனாக, 2011-ம் ஆண்டு அந்த குப்பைக் கிடங்கில் கழிவுகளை கொட்டுவதை சேலம் மாநகராட்சி நிர்வாகம். பின்னர், அங்கு திடக்கழிவு மேலாண்மை மையத்தையும் அமைத்து செயல்படுத்தி வந்தது.
இந்த நிலையில்தான், இந்தியா முழுவதும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நகரங்களை அழகுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து, நிதி ஒதுக்கீடும் செய்தது. ‘சீர்மிகு நகரம்’ என்ற கருத்தாக்கத்துடன் உருவாக்கப்படும் இந்த நகரங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஒரே குடையின்கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு நிதியுதவியோடு சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.965.87 கோடி மதிப்பீட்டில் சீா்மிகு நகரத் திட்டத்தில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், குழந்தைகள், இளைஞா்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களின் அறிவியல், தொழில்நுட்பம் சாா்ந்த அறிவுத்திறனை வளா்த்துக் கொள்ளும் வகையில் மாநகரப் பகுதியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் முதல் அறிவியல் பூங்கா இதுதான். இந்த பூங்காவில் விண்வெளி ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தும் ஜி.எஸ்.எல்.வி மற்றும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மாதிரிகள் அமைக்கப்பட்டுல்ள்ளன. விண்வெளியில் ஏற்படும் சந்திர, சூரிய கிரகணங்கள் போன்ற நிகழ்வை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 30 போ் அமா்ந்து காணக்கூடிய கோளரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பூங்கா என்றாலே ஓடி ஆடி விளையாடும் மகிழ்ச்சியான தருணங்களை கொடுக்கும் இடமாகவே கருதப்படும். ஆனால், இந்த பூங்கா மனிதனுடைய சிந்தனைக்கும், அறிவிக்கும் ஒரு உந்துதலை ஏற்படுத்தக்கூடிய பூங்காவாகவே அமைக்கப்பட்டுள்ளது இந்தப் பூங்காவை அதிக அளவில் தற்போது சிறுவர்கள் பார்த்து ரசித்து தங்கள் பாடப்புத்தகத்தில் உள்ளதை ஒப்பிட்டு வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பிரத்யேக முறையில் செயல் விளக்கம் அளிக்கவும் இங்கு ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் மிக சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா, சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாணவ, மாணவர்களின் அறிவில் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு உன்னத கருவியாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.
இதேபோல, சேலம் மாநகராட்சி குப்பைக் கிடங்கும் 20.50 கோடி ரூபாய் செலவில் பசுமைப் பூங்காவாக மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, 12.90 ஏக்கர் நிலப்பரப்பு 3 தளங்களாக பிரிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புல் தளங்களுடன் கூடிய திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், நடைமேடை, பொதுமக்கள் பூங்காவில் அமர்ந்து ஓய்வெடுப்பதற்கான இருக்கை அமைத்தல் மற்றும் மிதிவண்டி ஓட்டும் தளம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, தரைமட்டத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு உபயோகமற்ற பழைய திடக்கழிவுகள் சமன்படுத்தப்பட்டு, கழிவுகள் சரியாத வண்ணம் பாதுகாப்பு வலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், 11 மீட்டர் உயரத்திற்கு பழைய திடக்கழிவுகளை சமன்படுத்தும் பணிகளும் முடிவடைந்திருக்கின்றன. இந்த பசுமைப் பூங்கா விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று தெரிகிறது..