தரமில்லாத பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கிய அதே நிறுவனங்களுக்கு மீண்டும் ஆர்டர் வழங்கப்பட்டிருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த பொங்கல் பண்டிக்கைக்கு, தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், இப்பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டினார்கள். உதாரணமாக, மிளகாய் தூளில் சாயப்பொடியும், மஞ்சள் தூளில் ரம்பத்தூளும் கலந்திருப்பதாக கூறப்பட்டது. அதேபோல, மிளகில் பருத்திக் கொட்டையும், பப்பாளி விதையும் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. மேலும், புளியில் பல்லியும், வெல்லம் கிரீஷ் போலவும் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, மேற்கண்ட நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டதோடு, அந்நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஆகவே, மேற்கண்ட நிறுவனங்களுக்கு அரசு டெண்டர்கள் எதுவும் வழங்கப்படாது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில்தான், குற்றச்சாட்டுக்கு ஆளான 3 நிறுவனங்களுக்கு மீண்டும் ஆர்டர் வழங்கப்பட்டிருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் 3.75 கோடி ரூபாய் அளவிற்கு அபராதம் விதித்தது தி.மு.க. அரசு. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடை செய்யவில்லை. மேற்கண்ட 6 நிறுவனங்களில், தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்த அருணாச்சலா இன்பெக்ஸ், நேச்சுரல் புட் கமர்சியல், இண்டெகிரேடட் சர்வீஸ் பாயிண்ட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 2.50 கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், அதே 3 நிறுவனங்களுக்கு அதே பொருட்களான 4 கோடி லிட்டர் பாமாயிலும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்குவதற்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் 2.15 கோடி குடும்பங்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட டெண்டரில் ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் இழப்பு என்றாலும் கிட்டத்தட்ட 210 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றிருக்கிறது. இது வெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான். இன்னும் மிளகு, புளி, மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள் என மேலும் சில 100 கோடிகள் சுருட்டப்பட்டிருக்கலாம். தவறுகளை திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை வழங்கிய அதே நிறுவனத்திற்கு சொற்பத் தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப்படுத்துகிறது. இந்த ஊழல் வெளிச்சம்தான் விடியல் போல” என்று கூறியிருக்கிறார்.