தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் மேகலயாவில் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையைச் சேர்ந்தவர் விஸ்வா தீனதயாளன். லயோலா கல்லூரியில் பி.காம். படித்த இவர், மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். எதிர்வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸ் நகரில் தொடங்கவுள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவிருந்தார். இதனிடையே, மேகலயா மாநிலம் ஷில்லாங்கில் இன்று தொடங்கவிருக்கும் 83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். இதற்காக, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி விஸ்வா தீனதயாளன் மற்றும் ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகிய வீரர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த ட்ரெய்லர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருக்கும் தடுப்புச் சுவரையும் தாண்டி வந்து கார் மீது மோதியது. இதில், கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த விஸ்வா தீனதயாளன், ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகியோரை நோங்போ சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், வழியிலேயே விஸ்வா தீனதயாளன் உயிரிழந்து விட்டார். மற்ற 3் பேரும் ஷில்லாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீனதயாளனின் உடல் இன்று காலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், விஷ்வா தீனதயாளனின் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜுஜூ, எல்.முருகன், மேகாலயா முதலமைச்சர் கொன்ராட் சங்கா, டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். மேகாலய முதல்வர் கான்ராட் சங்மாவின் இரங்கல் ட்வீட் பதிவில், “இளம் வயதில் கனவுகளை சுமந்துகொண்டிருந்த தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்தது மிகுந்த மனவேதனையை தருகிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்திருக்கிறார். இதனிடையே, உயிரிழந்த விஸ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ஹரியானா மாநில துணை முதலமைச்சர் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்திருக்கிறார். மேலும், இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலாவும் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.