2,000 கிலோ கறியில் பிரியாணி விருந்து, 3,000 கிலோ சிக்கன் 65, பாட்டுக் கச்சேரி, 500 ரூபாய் நோட்டு பணமழை என ஆடம்பரமாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் தி.மு.க. அமைச்சர் ஒருவர். தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கூட முழுதாக முடியாத நிலையில், 10 ஆண்டுகளாக வருமானமே இல்லாமல் இருந்த அமைச்சருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? அதற்குள் வசூலை குவித்து விட்டார்களா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த தி.மு.க., தொடர்ந்து 2016 சட்டமன்றத் தேர்தலிலும் மண்ணைக் கவ்வியது. மேலும், 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வினரே அதிகளவில் வெற்றி பெற்றனர். இதன் பிறகு, 2016-ல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க.வினர் வருமானம் இன்றி தவித்து வந்தனர். ஆகவே, 2021 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தனர். இதற்காக, கடனாகவும், வட்டிக்கும் பணம் வாங்கி வாக்காளர்களை பணமழையில் நனைய வைத்தனர். நினைத்தபடியே தி.மு.க. ஆட்சிக்கும் வந்துவிட்டது.
அதேசமயம், தி.மு.க.வின் பூனைக்குட்டியும் வெளியே வந்து விட்டது. அதாங்க, கொலை, கொள்ளை, ரவுடியிஸம், ஊழல் ஆகியவைதான். தி.மு.க.வின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான அமைச்சர்கள், அரசியலிலும், ஊழல் செய்வதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இவர்களில் பலர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஆகவே, ஆட்சிக்கு வந்தவுடன் தங்களது குண்டர்கள் கூட்டத்தை கட்டவிழ்த்து விட்டதோடு, ஊழலை அரங்கேற்றுவதிலும் களமிறங்கி விட்டனர். அந்த வகையில், மின்வாரியத்தில் நடந்த 5,000 கோடி ரூபாய் ஊழலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், பல துறைகளின் அமைச்சர்களும் ஊழலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில்தான், 2,000 கிலோ ஆட்டுக்கறியில் மணக்க மணக்க பிரியாணியும், 3,000 கிலோ சிக்கனில் சிக்ஸ்டிபைவ்வும் செய்து தி.மு.க.வினருக்கு தடபுடல் விருந்து வைத்திருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா.ராதாகிருஷ்ணன். மேலும், பாட்டுக் கச்சேரி வைத்து, அதில் தானும் ஒரு பாட்டுப்பாடி 500 ரூபாய் நோட்டு பண மழையிலும் நனைந்திருக்கிறார். அதாவது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் அனிதா.ராதாகிருஷ்ணன். இதில், அவர் அமோக வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து, தன்னை வெற்றிபெறச் செய்த தி.மு.க.வினரை வெயிட்டாக கவனிக்க நினைத்தார் அனிதா. ஆகவே, 2,000 கிலோ ஆட்டுக்கறியில் பிரியாணியும், 3,000 கிலோ சிக்கனில் சிக்ஸ்டிபைவ்வும் செய்து ஆயிரக்கணக்கான தி.மு.க.வினருக்கு விருந்து வைத்தார். இதில், ஹைலைட் என்னவென்றால் இந்த நிகழச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டது தி.மு.க. மகளிரணி தலைவர் கனிமொழி எம்.பி. என்பதுதான். காரணம், இவர் திருச்செந்தூர் தொகுதியை உள்ளடக்கிய தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்.
இது மட்டுமா, தி.மு.க. நிர்வாகிகள் 100 பேருக்கு 1 பவுனில் தங்க மோதிரம் பரிசாக வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், மோதிரத்தை பரிசாகப் பெற்ற தி.மு.க. நிர்வாகிகள் அனிதா.ராதாகிருஷ்ணன் காலில் விழுந்து வணங்கிச் சென்றார்களே தவிர, கனிமொழியின் காலில் யாரும் விழவில்லை. இதனால், கனிமொழியின் முகம் சுருங்கிப் போனது. இதைவிட கூத்து என்னவென்றால், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திரை இசைக் கச்சேரியில் அனிதாவும் ஒரு பாட்டு பாடியதுதான். சிவாஜி கணேசனின் பழைய படத்தின் பாடலான ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ என்ற பாடலை பாடினார். அப்போது, தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகி உமரி சங்கர் என்கிற ஒரு பெரிய தலைக்கட்டு 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை அனிதாவின் மேல் மழை போல பொழிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நோட்டுக்களை இசைக் கச்சேரியை நடத்தியவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்த நிகழ்ச்சிக்கான மொத்த செலவு எப்படியும் 2 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். தி.மு.க. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்து ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில் அனிதா.ராதாகிருஷ்ணனுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆகவே, மீன்வளத்துறை சார்பில் விடப்பட்ட டெண்டர் அல்லது அத்துறையில் போடப்படும் போஸ்டிங் ஆகியவற்றில் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. எனவே, இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினரும், அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி, உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் எண்ணமாக இருக்கிறது.