ஹிந்து மதத்தைச் சேர்ந்த காதலி இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்துவிட்டதால், ஆத்திரமடைந்து அப்பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்ட இமான் ஹபீப்பை போலீஸார் கைது செய்தனர்.
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்தே, சமூக வலைத்தள காதலர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் காதலை வளர்த்து வந்த ஜோடிகள், தற்போது இன்ஸ்டாகிராமில் வந்து நிற்கிறது. ஆனால், இந்த சமூக வலைத்தளக் காதல் பெரும்பாலும் சிக்கலிலேயே முடிகிறது என்பது நிதர்சனம். இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்களை கூறலாம். சமூக வலைத்தளங்களில் காதலிப்பவர்கள் நேரில் சந்திக்கும்போதுதான் தங்களது எதிர்பார்ப்புப்படி இல்லை என்பது தெரியவரும். இதனால், இருவரும் பிரிந்து செல்லக்கூடிய சூழல் ஏற்படும்.
அதேபோல, சிலர் தான் பெரிய ஆள் என்று கதைகளை அளந்துவிட்டு காதலிப்பார்கள். நேரில் சந்திக்கும்போதுதான் அவரது உண்மையான குணம் தெரியவரும். இன்னும் சிலரோ, திருமணமான நிலையிலும் திருமணமாகவில்லை என்று சொல்லி காதலிப்பார்கள். நேரில் சந்திக்கும்போதுதான் அவரது சுயரூபம் தெரியவரும். இப்படி சமூக வலைத்தள காதல் 99 சதவிகிதம் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. இதையும் மீதி திருமணம் செய்து கொண்டவர்களில் ஒரு சிலரே இணக்கமாக வாழ்கின்றனர். மற்றவர்கள் ஏதேனும் ஒரு வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். அப்படித்தான் இன்ஸ்டாகிராமில் காதலித்த ஒரு ஜோடியின் கதியும் ஆகியிருக்கிறது.
திருப்பூரைச் சேர்ந்த இமான் ஹமீப். இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கரூரைச் சேர்ந்த பவித்ரா என்கிற 21 வயது இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதல மாறி, இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். அப்போது, இமான் ஹபீப்புக்கு பண உதவி செய்வது, செல்போன் ரீசார்ஜ் செய்து விடுவது என ஏகப்பட்ட பணத்தை செலவழித்திருக்கிறார் பவித்ரா. ஒரு கட்டத்தில் திருப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பவித்ராவை வரச்சொல்லி இருக்கிறார் இமான் ஹபீ.ப். இதை நம்பி திருப்பூர் சென்ற பவித்ராவை, காசிபாளையம் காந்தி நகரில் தங்க வைத்திருக்கிறார். அங்கு இருவரும் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்கள். இது இரு குடும்பத்தினருக்கும் தெரியாது என்கிறார்கள்.
இதன் பிறகு, தினமும் குடித்துவிட்டு வரும் இமான் ஹபீப், பவித்ராவுடன் அத்துமீறி நடந்துகொள்வதோடு, அவரை அடித்து துன்புறுத்தியும் இருக்கிறார். மேலும், பவித்ராவை நிர்வாணமாக்கி போட்டோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. தவிர, இருவரும் அந்தரங்கமாக இருக்கும்போது, அதையும் பவித்ராவுக்குத் தெரியாமல் போட்டோ எடுத்திருக்கிறார். பின்னர், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மதம் மாற வேண்டும் என்று பவித்ராவிடம் வற்புறுத்தி இருக்கிறார் இமான் ஹபீப். இதற்கு பவித்ரா மறுப்புத் தெரிவித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த இமான் ஹபீப், பவித்ராவை அடித்து சித்ரவதை செய்ததோடு, அவரது ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். மேலும், பவித்ராவின் செல்போனில் இருந்த அவரது உறவினர்களின் எண்களுக்கு போன் செய்து, பவித்ரா பற்றி அவதூறாகவும் பேசியிருக்கிறார். தவிர, மதம் மாறாவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பவித்ராவின் ஆபாச புகைப்படங்களையும் இமான் ஹபீப், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, ஹிந்து முன்னணி கோட்டச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரிடம் விஷயத்தை கூறி கண்ணீர் விட்டிருக்கிறார் பவித்ரா. இதைத் தொடர்ந்து, இருவரும் பவித்ராவை அழைத்துக் கொண்டு திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று இமான் ஹபீப் மீது நடவடிக்கை எடுக்கும்படி மே 4-ம் தேதி புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் ஜாதியைச் சொல்லி திட்டியது, பெண்ணை கொடுமை செய்தது, அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இமான் ஹமீப் மீது வழக்குப் பதிவு செய்த நல்லூர் போலீஸார், நேற்று அவரை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.