திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் மாணவிகளை மத மாற்றம் செய்ய முயன்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ரவுடியிசம் ஒருபுறமும், கொலை, கொள்ளை மறுபுறமும் என தமிழகமே அல்லோகலப்பட்டு வருகிறது. அதேபோல, மத மாற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தஞ்சை பள்ளியில் படித்த அரியலூர் மாணவி லாவண்யா மத மாற்ற டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டார். கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்ட அரசுப் பள்ளியில் மாணவிகளை மதம் மாற்ற முயன்ற தையல் கலை ஆசிரியை மீது புகார் எழுந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், திருப்பூர் பள்ளியிலும் மத மாற்ற முயற்சி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 12 வயதுடைய மகள், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்தான், இப்பள்ளியில் பயிலும் தமிழ் ஆசிரியை ஒருவர், மாணவிகளை மத மாற்றம் செய்ய முயல்வதாக குற்றம்சாட்டி இருக்கிறார். மாணவிகள் நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்சை கோர்த்த கயிறும் அணிந்து செல்வதற்கு ஆசிரியை எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், ஹிந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதாகவும், மத மாற்ற முயற்சியில் ஈடுபடுவதாகவும் தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருக்கிறார்கள். அப்புகாரில், வகுப்பில் பிரார்த்தனையை கிறிஸ்தவ முறைப்படி செய்ய வேண்டும் என்று ஆசிரியை வற்புறுத்தியதாகவும், இதை ஏற்றுக் கொள்ளாத தங்களது மகளை கடுமையாகத் திட்டியதாகவும், ஆகவே, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனிடையே, இதுகுறித்து தகவலறிந்த ஹிந்து முன்னணி மாநிலச் செயலர் செந்தில்குமார் மற்றும் தொண்டர்கள் திரண்டு, ‘மத மாற்றத்துக்கு முயன்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று போலீஸாரிடம் வலியுறுத்தினர். இச்சம்பவம் திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.